உலக பெண்கள் ஆக்கி லீக்: இந்திய அணிக்கு 2–வது வெற்றி


உலக பெண்கள் ஆக்கி லீக்: இந்திய அணிக்கு 2–வது வெற்றி
x
தினத்தந்தி 3 April 2017 11:15 PM GMT (Updated: 3 April 2017 7:23 PM GMT)

உலக பெண்கள் ஆக்கி லீக் போட்டியில் இந்திய அணி 1–0 என்ற கோல் கணக்கில் பெலாரசை தோற்கடித்து 2–வது வெற்றியை ருசித்தது.

வான்கோவெர்,

உலக பெண்கள் ஆக்கி லீக் (ரவுண்ட் 2) போட்டி கனடாவில் உள்ள வான்கோவெரில் நடந்து வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது 2–வது லீக் ஆட்டத்தில் பெலாரசை எதிர்கொண்டது.

இரு அணிகளும் சமபலத்துடன் விளங்கியதால் ஆட்டம் தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நகர்ந்தது. இரு அணிகளுக்கும் ஆரம்பத்திலேயே பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இரண்டு அணிகளும் அதனை வீணடித்தன.

வந்தனா கட்டாரியா

21–வது நிமிடத்தில் இந்திய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதனை இந்திய அணியினரால் கோலாக மாற்ற முடியவில்லை. 22–வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக்க பெலாரஸ் அணியினர் தீவிரம் காட்டினார்கள். ஆனால் இந்திய அணி கோல்கீப்பர் சவிதா பந்தை அபாரமாக தடுத்து அணியை காப்பாற்றினார்.

26–வது நிமிடத்தில் இந்திய அணி கோல் அடித்தது. வந்தனா கட்டாரியா பேக் ஸ்டிக்கால் அருமையாக அடித்து பந்தை கோலுக்குள் திணித்தார். முதல் பாதியில் இந்திய அணி 1–0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

இந்திய அணி வெற்றி

பின்பாதியில் இரு அணிகளுக்கும் பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்தன. அதில் ஒன்றை கூட இரு அணியாலும் கோலாக்க முடியவில்லை. 58–வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி பெலாரஸ் அணி எடுத்த நல்ல முயற்சியை இந்திய அணியின் கோல் கீப்பர் அருமையாக செயல்பட்டு முறியடித்தார்.

முடிவில் இந்திய அணி 1–0 என்ற கோல் கணக்கில் பெலாரஸ் அணியை வீழ்த்தி 2–வது வெற்றியை ருசித்தது. இந்திய அணி முதலாவது லீக் ஆட்டத்தில் பெனால்டி ஷூட்–அவுட்டில் 4–2 என்ற கோல் கணக்கில் உருகுவேயை சாய்த்து இருந்தது. இந்த வெற்றியின் மூலம் ‘ஏ’ பிரிவில் முதலிடம் பிடித்த இந்திய அணி அரைஇறுதிக்கு முன்னேறியது.


Next Story