பெண்கள் உலக ஆக்கி லீக்: இந்திய அணி ‘சாம்பியன்’ பெனால்டி ‘ஷூட்–அவுட்’டில் சிலியை வீழ்த்தியது


பெண்கள் உலக ஆக்கி லீக்: இந்திய அணி ‘சாம்பியன்’ பெனால்டி ‘ஷூட்–அவுட்’டில் சிலியை வீழ்த்தியது
x
தினத்தந்தி 10 April 2017 11:45 PM GMT (Updated: 10 April 2017 9:21 PM GMT)

பெண்கள் உலக ஆக்கி லீக் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி பெனால்டி ‘ஷூட்–அவுட்’டில் சிலியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

வான்கோவெர்,

பெண்கள் உலக ஆக்கி லீக் (ரவுண்ட் 2) போட்டி கனடாவில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் இந்திய அணி, சிலியை எதிர்கொண்டது.

இந்த ஆட்டம் தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நகர்ந்தது. 5–வது நிமிடத்தில் சிலி அணி முதல் கோல் அடித்தது. அந்த அணி வீராங்கனை மரியா மால்டோனா இந்த கோலை அடித்தார். 22–வது நிமிடத்தில் இந்திய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிட்டியது. சிலி கோல்கீப்பர் கிளாடியா அபாரமாக செயல்பட்டு, இந்திய அணியின் இந்த கோல் அடிக்கும் முயற்சியை முறியடித்தார்.

சமநிலை

41–வது நிமிடத்தில் இந்திய அணி பதில் கோல் திருப்பியது. பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி இந்திய வீராங்கனை அனுபமா பார்லா இந்த கோலை திணித்தார்.

கடைசி கட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்க கடுமையாக போராடினாலும், அதற்கு பலன் கிடைக்கவில்லை. வழக்கமான ஆட்ட நேரம் முடிவில் இரு அணிகளும் 1–1 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தன.

பெனால்டி ஷூட்டில் இந்தியா வெற்றி

இதனால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க ‘பெனால்டி ‘ஷூட்–அவுட்’ முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் இந்திய அணியின் கோல்கீப்பர் சவிதா புனியா அபாரமாக செயல்பட்டு இந்திய அணி வெற்றியை சுவைப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.

சிலி அணியின் கிம் ஜேக்கப், ஜோஸ்பா ஆகியோர் பெனால்டி ஷூட்டில் முதல் 2 வாய்ப்பில் கோல் எடுக்க எடுத்த முயற்சிகளை சவிதா லாவகமாக செயல்பட்டு தடுத்தார். அதேநேரத்தில் இந்திய அணியின் கேப்டன் ரிது ராணி, மோனிகா மாலிக் ஆகியோர் தங்கள் வாய்ப்பை கோலாக்கி 2–0 என்ற கணக்கில் முன்னிலை தேடிக்கொடுத்தனர். சிலி அணியின் கரோலினா கார்சியா 3–வது பெனால்டி வாய்ப்பை கோலாக்கினார். 3–வது பெனால்டி வாய்ப்பை இந்திய வீராங்கனை தீபிகா கோலாக மாற்றினார். இதனால் இந்திய அணி பெனால்டி ஷூட்–அவுட்டில் 3–1 என்ற கோல் கணக்கில் சிலியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த போட்டி தொடரின் சிறந்த கோல்கீப்பர் விருதை இந்தியாவின் சவிதா புனியா பெற்றார்.

அடுத்த சுற்றுக்கு தகுதி

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி, பெல்ஜியத்தில் ஜூன் 21–ந் தேதி முதல் ஜூலை 2–ந் தேதி வரை நடைபெறும் பெண்களுக்கான உலக ஆக்கி லீக்கின் அடுத்த சுற்று (அரைஇறுதி) போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளது.


Next Story