உலக ஆக்கி லீக்: பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா 7 கோல் அடித்து அசத்தல்


உலக ஆக்கி லீக்: பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா 7 கோல் அடித்து அசத்தல்
x
தினத்தந்தி 18 Jun 2017 10:45 PM GMT (Updated: 18 Jun 2017 8:02 PM GMT)

கிரிக்கெட்டில் இந்திய அணி சொதப்பிய நிலையில், ஆக்கியில் ஆறுதல் அளிக்கும் வகையில் முடிவு கிடைத்தது.

லண்டன்,

லண்டனில் நடந்த உலக ஆக்கி லீக்கில் இந்திய அணி 7–1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை பந்தாடியது.

உலக ஆக்கி லீக் போட்டி (அரைஇறுதி சுற்று) லண்டனில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன.

‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி நேற்று பாகிஸ்தானுடன் மோதியது. ஆக்ரோ‌ஷமாக விளையாடிய இந்திய வீரர்கள் ஆட்டத்தில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி கோல் மழை பொழிந்தனர். எந்த ஒரு தருணத்திலும் பாகிஸ்தானின் கையை ஓங்க விடவில்லை. முடிவில் இந்திய அணி 7–1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை ஊதித்தள்ளியது. ஹர்மன்பிரீத்சிங் (13, 33–வது நிமிடம்), தல்விந்தர் சிங் (21, 24–வது நிமிடம்), ஆகாஷ்தீப்சிங் (47, 59–வது நிமிடம்), பிரதீப் மோர் (49–வது நிமிடம்) ஆகியோர் இந்திய தரப்பில் கோல் அடித்தனர். பாகிஸ்தான் அணியில் முகமது உமர் பூட்டோ (57–வது நிமிடம்) ஒரு கோல் திருப்பினார்.

ஏற்கனவே ஸ்காட்லாந்து, கனடாவை தோற்கடித்திருந்த இந்தியாவுக்கு இது ‘ஹாட்ரிக்’ வெற்றியாகும். இதன் மூலம் 9 புள்ளிகளுடன் இந்திய அணி கால்இறுதிக்கு முன்னேறியது. பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக சந்தித்த 3–வது தோல்வியாகும். இதனால் அந்த அணியின் கால்இறுதி வாய்ப்பு ஏறக்குறைய முடிவுக்கு வந்து விட்டது.

இந்திய அணி தனது அடுத்த லீக்கில் நெதர்லாந்துடன் நாளை மோதுகிறது. பாகிஸ்தான் அணி ஸ்காட்லாந்தை இன்று சந்திக்கிறது.


Next Story