உலக ஆக்கி லீக் அரைஇறுதி சுற்று; இந்தியா–நெதர்லாந்து அணிகள் இன்று மோதல்


உலக ஆக்கி லீக் அரைஇறுதி சுற்று; இந்தியா–நெதர்லாந்து அணிகள் இன்று மோதல்
x
தினத்தந்தி 19 Jun 2017 9:45 PM GMT (Updated: 19 Jun 2017 8:42 PM GMT)

உலக ஆக்கி லீக் அரைஇறுதி சுற்றில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா–நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

லண்டன்,

உலக ஆக்கி லீக் அரைஇறுதி சுற்று போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் ஆட்டங்களில் மோதி வருகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.

இதில் ‘பி’ பிரிவில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் பாகிஸ்தான் அணி 3–1 என்ற கோல் கணக்கில் ஸ்காட்லாந்தை தோற்கடித்து முதல் வெற்றியை ருசித்தது. பாகிஸ்தான் அணி, நெதர்லாந்து, கனடா, இந்தியா அணிகளிடம் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து இருந்தது. ஸ்காட்லாந்து அணி அடுத்தடுத்து சந்தித்த 3–வது தோல்வி இதுவாகும்.

மற்றொரு லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 2–1 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தி 3–வது வெற்றியுடன் தோல்வியை சந்திக்காமல் வீறுநடை போட்டு வருகிறது. ஒரு வெற்றி பெற்ற கனடா அணி கண்ட 2–வது தோல்வி இது.

இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) லீக் ஆட்டம் முடிவடைகிறது. ‘பி’ பிரிவில் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.

உலக தர வரிசையில் 6–வது இடத்தில் உள்ள இந்திய அணி, ஸ்காட்லாந்து (4–1), கனடா (3–0), பாகிஸ்தான் (7–1) அணிகளை அடுத்தடுத்து புரட்டி எடுத்த நம்பிக்கையுடன் களம் காணுகிறது. உலக தர வரிசையில் 4–வது இடத்தில் இருக்கும் நெதர்லாந்து அணியும் தொடர்ந்து 3 வெற்றியுடன் அடியெடுத்து வைக்கிறது. எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்த போட்டி தொடர் குறித்து இந்திய அணி கேப்டன் மன்பிரீத்சிங் கருத்து தெரிவிக்கையில், ‘முந்தைய லீக் ஆட்டத்தில் பெற்ற வெற்றி சிறப்பானதாகும். பாகிஸ்தானுக்கு எதிராக பெற்றதால் அப்படி சொல்லவில்லை. ஏனெனில் கடைசி ஆட்டத்தில் நாங்கள் எல்லா வகையிலும் நன்றாக ஆடினோம். முந்தைய போட்டிகளில் நாங்கள் பந்தை எங்கள் கட்டுப்பாட்டில் நன்றாக வைத்து விளையாடினாலும், கோல் அடிக்கும் வாய்ப்புகளை தவற விட்டோம். ஆனால் அந்த பின்னடைவுகளை சரி செய்து பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் நிறைய கோல் அடித்தோம். இந்த உத்வேகத்தை தொடர விரும்புகிறோம்’ என்றார்.

இன்று நடைபெறும் மற்ற லீக் ஆட்டங்களில் ஸ்காட்லாந்து–கனடா (பி பிரிவு), சீனா–மலேசியா (ஏ பிரிவு), தென்கொரியா–இங்கிலாந்து (ஏ பிரிவு) அணிகள் மோதுகின்றன.


Next Story