உலக ஆக்கி லீக்: கால்இறுதியில் இந்திய அணி தோல்வி


உலக ஆக்கி லீக்: கால்இறுதியில் இந்திய அணி தோல்வி
x
தினத்தந்தி 22 Jun 2017 8:24 PM GMT (Updated: 22 Jun 2017 8:24 PM GMT)

உலக ஆக்கி லீக் அரைஇறுதி சுற்று லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 6–வது இடம் வகிக்கும் இந்திய அணி

லண்டன்,

உலக ஆக்கி லீக் அரைஇறுதி சுற்று லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 6–வது இடம் வகிக்கும் இந்திய அணி, 14–ம் நிலை அணியான மலேசியாவுடன் மோதியது. இரு அணி வீரர்களும் தொடக்கம் முதலே களத்தில் ஆக்ரோ‌ஷமாக விளையாடினர். 19–வது நிமிடத்தில் மலேசிய வீரர் ராஸி ரஹிமும், 20–வது நிமிடத்தில் இன்னொரு மலேசிய வீரர் டெங்கு தாஜூதினும் கோல் அடித்தனர். இதன் பின்னர் இந்திய வீரர் ரமன்தீப்சிங் அடுத்தடுத்து (24 மற்றும் 26–வது நிமிடம்) கோல் போட்டு ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வந்தார். இதையடுத்து வெற்றிக்கனியை பறிப்பது யார்? என்று பரபரப்பான சூழலில், 48–வது நிமிடத்தில் மலேசியாவின் ராஸி ரஹிம் மீண்டும் ஒரு கோல் அடித்தார். அதுவே வெற்றி கோலாக அமைந்தது. முடிவில் மலேசியா 3–2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது. அத்துடன் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்கும் உலக கோப்பை போட்டிக்கும் மலேசியா தகுதி பெற்றது.

சில மந்தமான தடுப்பாட்டம் இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இந்திய அணி விட்டுக்கொடுத்த 7 பெனால்டி கார்னர் வாய்ப்பில் 3–ஐ மலேசியா கோலாக மாற்றியது. மலேசிய அணி அரைஇறுதியில் ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினாவுடன் நாளை மோதுகிறது. முன்னதாக அர்ஜென்டினா அணி தனது கால்இறுதியில் 3–1 கோல் கணக்கில் பாகிஸ்தானை சாய்த்தது.


Next Story