பாகிஸ்தான் அணிக்கு தகுந்த பதிலடி கொடுத்து விட்டோம் -ஹர்மன் பிரீத்சிங்


பாகிஸ்தான் அணிக்கு தகுந்த பதிலடி கொடுத்து விட்டோம் -ஹர்மன் பிரீத்சிங்
x
தினத்தந்தி 24 Jun 2017 8:02 AM GMT (Updated: 24 Jun 2017 8:02 AM GMT)

கடந்த ஞாயிற்றுகிழமை இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து, பாகிஸ்தான் கோப்பையை வென்றது.

டந்த ஞாயிற்றுகிழமை இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து, பாகிஸ்தான் கோப்பையை வென்றது. ஆனால் அதே சமயம், இங்கிலாந்தில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் 7-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி, இந்திய ஆக்கி அணி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக்கொண்டது. இந்த ஆட்டத்தில் இளம்வீரர் ஹர்மன் பிரீத்சிங் 2 கோல்களை அடித்து அட்டகாசப்படுத்தினார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான கோல் வேட்டையை ஆரம்பித்து வைத்ததும் இவர் தான். அதுகுறித்து ஹர்மன்பிரீத் பேசுகையில்....

“நான் ஆக்கி வீரர். இருப்பினும் கிரிக்கெட் விளையாட்டை ரசிப்பேன். இந்திய கிரிக்கெட் அணியின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும். ஆனால் சாம்பியன்ஸ் டிராபியின் இறுதி ஆட்டம் கணிக்கமுடியாத ஆட்டமாக மாறிவிட்டது. நான் மட்டுமல்ல.... இந்திய ரசிகர்கள் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏனெனில் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினர் நட்புறவாக விளையாடிக்கொண் டிருக்கையில்... நாங்கள் (ஆக்கி வீரர்கள்) இந்தியா-பாகிஸ்தான் எல்லைகளில் நடைபெறும் அத்துமீறல்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கருப்பு பட்டைகளுடன் விளையாடினோம். ராணுவ வீரனாக இருந்திருந்தால்... எல்லையில் போராடி இருக்கலாம். விளையாட்டு வீரர்கள் என்பதால்... போட்டி களத்தில் போராடினோம். அதனால் ஆட்டத்தின் முதல் நிமிடத்தில் இருந்தே போராட்டத்தை தொடங்கினோம். அதற்கு தகுந்த பலன் கிடைத்தது. எதிர்பார்த்த எல்லா விஷயங்களும் நடந்துவிடாது என்பதை போலவே... இந்திய கிரிக்கெட் அணி எதிர்பாராத தோல்வியை தழுவியது. இந்திய கிரிக்கெட் அணியினர்... எளிதில் பாகிஸ்தானை வென்று விடுவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்குள் இருந்தது. ஆனால் நினைத்தபடி நடக்கவில்லை” என்பவர், போராட்ட களமாக இருந்தாலும் சரி, போட்டிகளமாக இருந்தாலும் சரி அதில் இந்தியாவே வெல்லவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

“நட்புறவு காட்ட நாம் தயாராக இருக்கிறோம். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அனைவரிடமும் இருக்காது. எல்லை அத்துமீறல்கள், போர் பதற்றம்... என இந்தியா-பாகிஸ்தான் நட்புறவு வலு விழந்து காணப்படுகிறது. அந்த மனநிலை விளையாட்டில் வெளிப்படுகிறது. இருநாட்டு ரசிகர்களும்... விளையாட்டில் தங்கள் அணிக்கு கிடைக்கும் வெற்றியை போர் முனையில் கிடைக்கும் வெற்றியாக கொண்டாடுகிறார்கள். அதுதான் இந்தியா-பாகிஸ்தான் விளையாட்டுகளை சுவாரசியப்படுத்து கிறது. மிகவும் பிரபலமாக்குகிறது. இந்நிலையில் பாகிஸ்தானிடம் தோற்பது... இந்திய கிரிக்கெட் அணியினருக்கு பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். ஏனெனில் அந்த வலி-வேதனைகளை நாங்களும் அனுபவித்திருக்கிறோம். அதிலிருந்து மீள்வது மிகவும் கடினமான ஒன்று” என்பவர்... ஆக்கி போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக கிடைத்த வெற்றியை, இந்திய கிரிக்கெட் அணிக்கு சமர்ப்பிக்கிறார்.

“சாம்பியன்ஸ் டிராபியில் கிடைத்த தோல்விக்கு இந்திய கிரிக்கெட் அணியினர் நிச்சயம் பதிலடி கொடுப்பார்கள். அதை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன். தகுந்த சமயத்தில் அதற்கான பதிலடி கொடுக்கப்படும். அதற்கு முன்பாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக நாங்கள் பெற்ற வெற்றியை இந்திய கிரிக்கெட் அணியினருக்கு சமர்ப்பிக்கிறோம். இந்திய கிரிக்கெட் அணியினரை வென்றதற்கான பதிலடி... ஏற்கனவே இந்திய ஆக்கி வீரர்களால் கொடுக்கப்பட்டு விட்டது. இனி உங்களுடைய தருணம். அதுவரை ரசிகர்கள் கிரிக்கெட் வீரர்களுக்கு ஆதரவாக இருக்கவேண்டும். எனக்குள்ளும் ஒரு கிரிக்கெட் வீரன் இருக்கிறான். அவன் இந்திய கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகன். இந்திய கிரிக்கெட் அணி வென்றாலும், தோற்றாலும்... அவர்களுக்கு பக்கபலமாக இருப்பதே அவனுடைய லட்சியம்” என்று ஆறுதலாக முடிக்கிறார். 

Next Story