தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்; ரயில்வே அணி சாம்பியன்


தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்; ரயில்வே அணி சாம்பியன்
x
தினத்தந்தி 26 Jun 2017 8:23 AM GMT (Updated: 26 Jun 2017 8:23 AM GMT)

தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் ரயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரிய(RSPB) அணி வெற்றி

லக்னோ,

7 வது சீனியர் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த ஜூன் 15 ஆம் தேதி முதல் உத்தரபிரதேச மாநிலத்தின் லக்னோ நகரில் நடந்து வந்தன. மொத்தமுள்ள 20 அணிகளை நான்கு பிரிவுகளாக பிரித்து லீக் போட்டிகள் நடத்தப்பட்டது.

நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் ரயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரிய(RSPB) அணியும் பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கி அணியும் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் முதலாவதாக 15வது நிமிடத்தில் பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கி அணியின் ககன்பிரித் சிங் பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்தார். அதன்பின் 18வது நிமிடத்தில் ரயில்வே அணியின் அமித் ரோஹிடாஸ் பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்து 1-1 என சமன் செய்தார். தொடர்ந்து எதிர் அணியினரின் கோல் போடும் முயற்சிகளை இரு அணியினரும் தடுத்தனர். அதன்பின் கோல் ஏதும் அடிக்கப்படாததால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

எனவே வெற்றியை தீர்மானிக்க ஷூட்-அவுட் வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதை சரியாக பயன்படுத்திய ரயில்வே அணி 3 கோல்களை அடித்தது. ஆனால் பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கி அணி முதல் மூன்று வாய்ப்பையுமே தவற விட்டதால் ரயில்வே அணி வெற்றி பெற்றது.

இதன்மூலம் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை ரயில்வே அணி வென்றது. முன்னதாக நடைபெற்ற வெண்கல பதக்க ஆட்டத்தில் ஹாக்கி பஞ்சாப் அணி ஹாக்கி சண்டீகர் அணியை வீழ்த்தியது.

Next Story