ஆசிய கோப்பை ஆக்கி: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா ஜப்பானை பந்தாடியது


ஆசிய கோப்பை ஆக்கி: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா ஜப்பானை பந்தாடியது
x
தினத்தந்தி 11 Oct 2017 11:45 PM GMT (Updated: 11 Oct 2017 10:05 PM GMT)

ஆசிய கோப்பை ஆக்கியில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி 5-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

டாக்கா,

10-வது ஆசிய கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இதில் ‘ஏ’ பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஜப்பானை எதிர்கொண்டது. பட்டம் வெல்ல வாய்ப்பு உள்ள அணியாக வர்ணிக்கப்படும் இந்தியா தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. கிடைத்த சிறிய இடைவெளியிலும் ஊடுருவி அதை நமது வீரர்கள் சாதகமாக மாற்றிக் காட்டினர். எஸ்.வி. சுனில் (3-வது நிமிடம்), லலித் உபாத்யாய் (22-வது நிமிடம்), ரமன்தீப்சிங் (33-வது நிமிடம்), ஹர்மன்பிரீத்சிங் (35 மற்றும் 48-வது நிமிடம்) ஆகிய இந்தியர்கள் கோல்களை திணித்தனர். ஹர்மன்பிரீத்சிங் அடித்த இரு கோல்களும் பெனால்டி கார்னர் வாய்ப்பின் மூலம் கிட்டியவை ஆகும்.

தொடக்கத்திலேயே ஒரு கோல் போட்ட ஜப்பானுக்கு அதன் பிறகு கடைசி கட்டத்தில் இரு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர்களின் முயற்சியை இந்திய தடுப்பாட்டக்காரர்கள் முறியடித்தனர். முடிவில் இந்தியா 5-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை பந்தாடியது. இந்திய அணி அடுத்த ஆட்டத்தில் வங்காளதேசத்தை நாளை எதிர்கொள்கிறது.

மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தான் 7-0 என்ற கோல் கணக்கில் உள்ளூர் அணியான வங்காளதேசத்தை துவம்சம் செய்தது. அபு மக்மூத் 3 கோல்கள் அடித்தார்.

இன்றைய ஆட்டங்களில் மலேசியா-சீனா, நடப்பு சாம்பியன் தென்கொரியா- ஓமன் அணிகள் (பி பிரிவு) மோதுகின்றன.

Next Story