ஆசிய கோப்பை ஆக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா


ஆசிய கோப்பை ஆக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
x
தினத்தந்தி 16 Oct 2017 12:00 AM GMT (Updated: 15 Oct 2017 8:58 PM GMT)

ஆசிய கோப்பை ஆக்கி போட்டியில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

டாக்கா,

8 அணிகள் இடையிலான 10-வது ஆசிய கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி வங்காளதேசத்தில் நடந்து வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது கடைசி லீக்கில் நேற்று பரம எதிரியான பாகிஸ்தானுடன் மோதியது. பட்டம் வெல்ல வாய்ப்பு உள்ள அணியாக வர்ணிக்கப்படும் இந்திய வீரர்கள் தற்போது சூப்பர் பார்மில் உள்ளனர்.

எதிர்பார்த்தது போலவே இந்திய அணியினர் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தியதுடன், பாகிஸ்தானின் தடுப்பு அரணை வெகு சீக்கிரமாக உடைத்தனர். 17-வது நிமிடத்தில் ஆகாஷ்தீப்சிங் தட்டிக்கொடுத்த பந்தை இந்தியாவின் சிங்லென்சனா சிங் கோலாக மாற்றினார். அதைத் தொடர்ந்து 44-வது நிமிடத்தில் ரமன்தீப்சிங்கும், 45-வது நிமிடத்தில் ஹர்மன்பிரீத் சிங்கும் கோல் போட்டு அமர்க்களப்படுத்தினர். ஆனாலும் பெரும்பாலான பெனால்டி கார்னர் வாய்ப்புகளை இந்திய வீரர்கள் வீணாக்கி விட்டனர். கடைசி கால்பகுதியில் மட்டும் பாகிஸ்தான் ஓரளவு ஈடுகொடுத்து விளையாடியது. அதன் பலனாக 49-வது நிமிடத்தில் அந்த அணியின் அலி ஷான் கோல் போட்டார்.

இந்தியா வெற்றி

விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை சாய்த்து 3-வது வெற்றியை (ஹாட்ரிக்) பதிவு செய்தது. ஏற்கனவே ஜப்பான் (5-1), வங்காளதேசத்தையும் (7-0) இந்திய அணி துவம்சம் செய்திருந்தது. அதே சமயம் பாகிஸ்தானுக்கு எதிராக இந் தியா தொடர்ச்சியாக பெற்ற 3-வது வெற்றி இதுவாகும்.
இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் ஜப்பான் 3-1 என்ற கோல் கணக்கில் வங்காளதேசத்தை தோற்கடித்தது.

இந்திய அணி 9 புள்ளிகளுடன் 2-வது சுற்றுக்கு கம்பீரமாக முன்னேறியது. பாகிஸ்தான், ஜப்பான் தலா 4 புள்ளிகள் பெற்ற போதிலும் கோல் விகிதாச்சாரம் அடிப்படையில் பாகிஸ்தான் அடுத்த சுற்று வாய்ப்பை தட்டிச்சென்றது.

இன்றைய ஆட்டங்கள்

‘பி’ பிரிவில் இன்று நடக்கும் கடைசி லீக் ஆட்டங்களில் மலேசியா-ஓமன், சீனா-தென்கொரியா அணிகள் மோதுகின்றன.
2-வது சுற்றுக்கு வரும் 4 அணிகளும் தலா ஒரு முறை மோதும். இதன் முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும்.

Next Story