ஆசிய கோப்பை ஆக்கி: இந்திய பெண்கள் அணி அறிவிப்பு


ஆசிய கோப்பை ஆக்கி: இந்திய பெண்கள் அணி அறிவிப்பு
x
தினத்தந்தி 16 Oct 2017 9:45 PM GMT (Updated: 16 Oct 2017 7:43 PM GMT)

பெண்கள் ஆசிய கோப்பை ஆக்கி போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

9-வது பெண்கள் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி ஜப்பானில் வருகிற 28-ந் தேதி முதல் நவம்பர் 5-ந் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் சீனா, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் அணிகளும், ‘பி’ பிரிவில் ஜப்பான், கஜகஸ்தான், தென்கொரியா, தாய்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோத வேண்டும். லீக் ஆட்டங்கள் முடிவில் எல்லா அணிகளும் புள்ளிகள் அடிப்படையில் எதிர்பிரிவில் உள்ள அணியுடன் கால்இறுதி ஆட்டத்தில் மோத வேண்டும்.

இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் சிங்கப்பூரையும் (28-ந் தேதி), 2-வது ஆட்டத்தில் சீனாவையும் (29-ந் தேதி), கடைசி லீக் ஆட்டத்தில் மலேசியாவையும் (31-ந் தேதி) எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி, அடுத்த ஆண்டு (2018) இங்கிலாந்தில் நடைபெறும் பெண்கள் உலக கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும்.

பெண்கள் ஆசிய கோப்பை ஆக்கி போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அணியின் கேப்டனாக ராணி ராம்பால், துணை கேப்டனாக சவிதா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்திய அணி வருமாறு:-

கோல்கீப்பர்கள்: சவிதா, ரஜனி எடிமர்பு, பின்களம்: தீப் கிரேஸ் எக்கா, சுனிதா லக்ரா, சுஷிலா சானு, சுமன்தேவி தோகம், குர்ஜித் கவுர், நடுகளம்: நிக்கி பிரதான், நமிதா டாப்போ, மோனிகா, லிலிமா மின்ஸ், நேகா கோயல், முன்களம்: ராணி ராம்பால், வந்தனா கட்டாரியா, லால்ரெம்சியாமி, சோனிகா, நவ்னீத் கவுர், நவ்ஜோத் கவுர்.

இந்திய அணியின் கேப்டன் ராணி ராம்பால் கருத்து தெரிவிக்கையில், ‘தேவையான அளவுக்கு எங்கள் ஆட்டத்தில் நாங்கள் முன்னேற்றம் கண்டு இருக்கிறோம். அணியின் ஒருங்கிணைந்த ஆட்டம் சிறப்பாக இருப்பதாக நான் நினைக்கிறேன். ஆசிய கோப்பை போட்டியில் சிறப்பாக செயல்பட்டு உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறுவோம்’ என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Next Story