ஆசிய கோப்பை ஆக்கி: மலேசிய அணியை பந்தாடியது இந்தியா


ஆசிய கோப்பை ஆக்கி: மலேசிய அணியை பந்தாடியது இந்தியா
x
தினத்தந்தி 19 Oct 2017 10:30 PM GMT (Updated: 19 Oct 2017 8:34 PM GMT)

ஆசிய கோப்பை ஆக்கி போட்டியில் ‘சூப்பர்-4’ சுற்றில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 6-2 என்ற கோல் கணக்கில் மலேசியாவை பந்தாடியது.

டாக்கா,

8 அணிகள் இடையிலான 10-வது ஆசிய கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி வங்காளதேசத்தில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா, பாகிஸ்தான், ‘பி’ பிரிவில் முதல் 2 இடங்களை பெற்ற மலேசியா, தென்கொரியா ஆகிய 4 அணிகள் 2-வது சுற்றுக்கு முன்னேறின. 2-வது சுற்றில் (சூப்பர்-4) ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

‘சூப்பர்-4’ சுற்றில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, மலேசியாவை எதிர்கொண்டது. இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி ஒரு கட்டத்தில் 5-0 என்ற கணக்கில் வலுவான முன்னிலை வகித்தது. அதன் பின்னர் மலேசியா அணி அடுத்தடுத்து 2 கோல்கள் திருப்பியது.

முடிவில் இந்திய அணி 6-2 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி, அஸ்லான் ஷா கோப்பை போட்டி மற்றும் உலக ஆக்கி லீக் அரைஇறுதி சுற்றில் கண்ட தோல்விகளுக்கு வஞ்சம் தீர்த்துக் கொண்டது. இந்திய அணியில் ஆகாஷ்தீப்சிங் 15-வது நிமிடத்திலும், ஹர்மன்பிரீத் சிங் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி 19-வது நிமிடத்திலும், உத்தப்பா 24-வது நிமிடத்திலும், குர்ஜந்த் சிங் 33-வது நிமிடத்திலும், எஸ்.வி.சுனில் 40-வது நிமிடத்திலும், சர்தார்சிங் 60-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். மலேசிய அணி தரப்பில் ராஜி ரஹிம் 50-வது நிமிடத்திலும், ரமதான் ரோஸ்லி 59-வது நிமிடத்திலும் பதில் கோல் திருப்பினார்கள். முதல் ஆட்டத்தில் இந்திய அணி, தென்கொரியாவுடன் டிரா (1-1) கண்டு இருந்தது. மலேசிய அணி 3-2 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை சாய்த்து இருந்தது.

தென்கொரியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான மற்றொரு ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

நாளை (சனிக்கிழமை) நடைபெறும் ஆட்டங்களில் தென்கொரியா-மலேசியா (பிற்பகல் 3 மணி), இந்தியா-பாகிஸ்தான் (மாலை 5.30 மணி) அணிகள் மோதுகின்றன.

Next Story