ஆசிய கோப்பை ஆக்கி: பாகிஸ்தானை பந்தாடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி


ஆசிய கோப்பை ஆக்கி: பாகிஸ்தானை பந்தாடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி
x
தினத்தந்தி 21 Oct 2017 9:45 PM GMT (Updated: 21 Oct 2017 8:27 PM GMT)

ஆசிய கோப்பை ஆக்கி போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை பந்தாடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

டாக்கா,

8 அணிகள் இடையிலான 10-வது ஆசிய கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி வங்காளதேசத்தில் நடந்து வருகிறது.

இதில் லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா, பாகிஸ்தான், ‘பி’ பிரிவில் முதல் 2 இடத்தை தனதாக்கிய மலேசியா, தென்கொரியா ஆகிய 4 அணிகள் 2-வது சுற்றுக்கு (சூப்பர்-4) முன்னேறின. சூப்பர்-4 சுற்றில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

சூப்பர்-4 சுற்றில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் டிரா கண்டாலே இறுதிப்போட்டிக்குள் நுழைய முடியும் என்ற நிலையில் களம் கண்ட இந்திய அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினாலும், கோல் வர நீண்ட நேரம் பிடித்தது.

36-வது நிமிடத்தில் இந்திய அணி முதல் கோல் அடித்தது. சத்பிர்சிங் இந்த கோலை அடித்தார். இந்திய வீரர்கள் ஹர்மன்பிரீத்சிங் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி 51-வது நிமிடத்திலும், லலித் உபாத்யாய் 52-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். மற்றொரு இந்திய வீரர் குர்ஜந்த் சிங் 57-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

பாகிஸ்தான் அணி பதில் கோல் திருப்ப எடுத்த முயற்சிக்கு கடைசி வரை பலன் கிடைக்கவில்லை. முடிவில் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிபோட்டிக்கு முன்னேறியது. இந்த ஆண்டில் இந்திய அணி, பாகிஸ்தானை 4-வது முறையாக சாய்த்தது. இதன் லீக் ஆட்டத்திலும், லண்டனில் நடந்த உலக லீக் அரைஇறுதி சுற்றில் 2 முறையும் வென்று இருந்தது.

இறுதிப்போட்டியில் இந்திய அணி, மலேசியா-தென்கொரியா அணிகள் இடையிலான ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியை சந்திக்கும்.

Next Story