ஆசிய கோப்பை ஆக்கி: இந்திய அணி 3-வது முறையாக ‘சாம்பியன்’


ஆசிய கோப்பை ஆக்கி: இந்திய அணி 3-வது முறையாக ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 22 Oct 2017 9:45 PM GMT (Updated: 22 Oct 2017 8:19 PM GMT)

ஆசிய கோப்பை ஆக்கி இறுதிப்போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

டாக்கா,

8 அணிகள் இடையிலான 10-வது ஆசிய கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, 12-வது இடத்தில் உள்ள மலேசியாவை எதிர்கொண்டது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 3-வது நிமிடத்தில் இந்திய அணி முதல் கோல் அடித்தது. ரமன்தீப் இந்த கோலை அடித்து இந்திய அணிக்கு முன்னிலை பெற்றுக்கொடுத்தார்.

29-வது நிமிடத்தில் இந்திய அணி 2-வது கோலை போட்டது. லலித் உபாத்யாய் இந்த கோலை அடித்து இந்திய அணிக்கு 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையை அதிகரித்தார்.

மலேசிய அணி பதில் கோல் திருப்ப ஆக்ரோஷமாக போராடியது. அந்த முயற்சிகளை இந்திய அணியின் தடுப்பு ஆட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினார்கள். கடைசி 10 நிமிடத்தில் நெருக்கடிக்கு ஆளான இந்திய அணியின் ஆட்டத்தில் சற்று தொய்வு ஏற்பட்டது. அதனை பயன்படுத்தி மலேசிய அணி வீரர் ஷாரில் சாபாக் 50-வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பினார்.

அதன் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. முடிவில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 6-3 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் தென்கொரியாவுக்கு அதிர்ச்சி அளித்தது. ஜப்பான் அணி 5-வது இடத்தையும், வங்காளதேச அணி 6-வது இடத்தையும், சீனா அணி 7-வது இடத்தையும், ஓமன் அணி கடைசி இடத்தையும் பிடித்தன.

இந்த போட்டி தொடரில் இந்திய அணி ஒரு ஆட்டத்திலும் தோல்வியை சந்திக்கவில்லை. சூப்பர்-4 சுற்றில் தென்கொரியாவுடன் (1-1) மட்டும் டிரா கண்டு இருந்தது. சூப்பர்-4 சுற்றில் இந்திய அணி 6-2 என்ற கோல் கணக்கில் மலேசியாவை சாய்த்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிய கோப்பையை இந்திய அணி 3-வது முறையாக தனதாக்கி இருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்த கோப்பையை உச்சி முகர்ந்துள்ளது. 2003-ம் ஆண்டில் கோலாலம்பூரில் நடந்த போட்டியிலும், 2007-ம் ஆண்டில் சென்னையில் நடந்த போட்டியிலும் இந்திய அணி கோப்பையை சொந்தமாக்கி இருந்தது.

ஆசிய கோப்பையை அதிகபட்சமாக தென்கொரியா 4 முறையும், இந்தியா, பாகிஸ்தான் அணிகள் தலா 3 முறையும் வென்று இருக்கின்றன.

சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஆக்கி அணியினருக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Next Story