ஜோஹர் கோப்பை ஆக்கி: ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வி


ஜோஹர் கோப்பை ஆக்கி: ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வி
x
தினத்தந்தி 26 Oct 2017 8:59 PM GMT (Updated: 26 Oct 2017 8:59 PM GMT)

6 அணிகள் இடையிலான 7–வது சுல்தான் ஜோஹர் கோப்பைக்கான ஜூனியர் ஆக்கி போட்டி (21 வயதுக்குட்பட்டோர்) மலேசியாவில் நடந்து வருகிறது.

ஜோஹர்பாரு,

6 அணிகள் இடையிலான 7–வது சுல்தான் ஜோஹர் கோப்பைக்கான ஜூனியர் ஆக்கி போட்டி (21 வயதுக்குட்பட்டோர்) மலேசியாவில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் இரு ஆட்டங்களில் ஜப்பான் (3–2), மலேசியாவை (2–1) தோற்கடித்தது. 3–வது லீக்கில் அமெரிக்காவை 22–0 என்ற கோல் கணக்கில் பந்தாடியது. இந்திய அணியில் 10 வீரர்கள் கோல் அடித்து வியக்க வைத்தனர்.

இந்த நிலையில் இந்தியா தனது 4–வது லீக்கில் நேற்று பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த மோதலில் 47–வது நிமிடம் வரை ஆட்டம் 3–3 என்ற கணக்கில் சமனில் இருந்தது. இந்திய அணியில் சஞ்சய், தில்பிரீத் சிங் (2) கோல் போட்டனர். யார் கை ஓங்கும் என்ற பரபரப்புக்கு மத்தியில் 49–வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் நாதன் எப்ராம்ஸ் கோல் போட்டு தங்கள் அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். முடிவில் இந்திய அணி 3–4 என்ற கோல் கணக்கில் போராடி தோல்வியை தழுவியது. இந்தியா கடைசி லீக்கில் இங்கிலாந்தை நாளை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெற்றால் தான் இந்திய அணியால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும்.


Next Story