ஆக்கி அசத்தல் பெண்கள்!


ஆக்கி அசத்தல் பெண்கள்!
x
தினத்தந்தி 18 Nov 2017 7:05 AM GMT (Updated: 18 Nov 2017 7:05 AM GMT)

ஆசியக் கோப்பையை இரண்டாவது முறையாக வென்று சாதித்திருக்கிறது, இந்தியப் பெண்கள் ஆக்கி அணி.

ந்தியா வந்திறங்கிய இந்தியப் பெண்கள் ஆக்கி வீராங்கனைகள் முகத்தில் சந்தோஷம், உற்சாகம், ததும்பியது.

குறிப்பாக, அணியின் தூண்களான கேப்டன் ராணி ராம்பால், துணை கேப்டனும் கோல் கீப்பருமான சவிதா பூனியா, நவ்ஜோத் கவுர், நவ்னீத் கவுர் ஆகியோரின் ஒவ்வோர் அசைவிலும் வெற்றிப் பெருமிதம்.

ஆனால் அவர்கள் தங்கள் வெற்றிக்குக் காரணமாக சுட்டிக்காட்டியது ஒருவரை. அவர்- பயிற்சியாளர் ஹரேந்திர சிங்.

“நாங்கள் சாம்பியன் ஆவோம் என்பதில் ஆரம்பம் முதலே எங்கள் பயிற்சியாளர் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். அதிலும் இறுதிப்போட்டி சமநிலையில் நீடித்து, ‘ஷூட் அவுட்’ வரை சென்றபோதும், ‘ஷூட் அவுட்டில் நமது வீராங்கனைகள் மூன்று கோல்கள் அடிப்பார்கள். நம் கோல்கீப்பர் சவிதா, இரண்டு கோல்களை தடுத்துவிடுவார்’ என்று நம்பிக்கையாகப் பேசினார். அதுவே எங்களுக்குள்ளும் தன்னம்பிக்கை பொங்கச் செய்துவிட்டது!” என்கிறார் நவ்ஜோத் கவுர். இறுதி ஆட்டத்தில் முதல் கோல் அடித்தவர் இவர்.

“பயிற்சியாளர் ஏன் அப்படிச் சொன்னார் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அனேகமாக, அவர் அவ்வளவு தூரம் எங்கள் மீது நம்பிக்கை வைத் திருக்க வேண்டும். பரபரப்பான ஷூட்-அவுட் தொடங்கும்முன்பே, தங்கம் நமக்குத்தான் என்று அவர் முடிவு செய்துவிட்டார்.”

ஹரேந்திர சிங் இந்திய மகளிர் ஆக்கி அணியில் பயிற்சியாளராக இணைந்து மூன்று மாத காலம்தான் ஆகிறது. ஆனால் அதற்குள் அவர்களை ஓர் ஒருங்கிணைந்த படையாகத் திரட்டிவிட்டார்.

“அவர் எப்போதும் எங்களை ஊக்கப்படுத்திக்கொண்டே இருப்பார். அதுதான் எங்களுக்குத் தெம்பு தந்தது. இந்தியாவுக்காக நீங்கள் இதைச் செய்ய வேண்டும்... நீங்கள் பிறந்த நாட்டுக்காக இதை நீங்கள் சாதிக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருப்பார். அவருடன் எளிதாக உரையாட முடிந்ததும், எங்களது கருத்துகளை தெரிவிக்க முடிந்ததும் இன்னொரு பிளஸ்” -இவ்வாறு சொல்பவர், துணை கேப்டன் சவிதா.

இந்தப் புத்துணர்ச்சியூட்டும் வெற்றி இந்திய ஆக்கி வீராங்கனைகளின் பழைய கசப்பான தோல்வி நினைவுகளைத் துடைத்திருக் கிறது. போட்டிகள் நிறைந்த 2018-ம் ஆண்டில் துள்ளலாகச் செயல்படும் துடிப்பையும் தந்திருக்கிறது. காமன்வெல்த் போட்டி, ஆசிய விளையாட்டுப் போட்டி, உலகக் கோப்பை போட்டி போன்ற முக்கியமான போட்டிகள் அடுத்த ஆண்டு வரிசை கட்டி நிற்கின்றன.

இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெறும் ஆசியக் கோப்பை போட்டியில் தங்கம் வென்றால், இவர்களால் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதிபெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

“இந்த ஆண்டின் துவக்கத்தில் தென்ஆப்பிரிக்கா ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற ஆக்கி வேல்டு லீக் அரையிறுதியில் பங்கேற்ற 10 அணிகளில் நாங்கள் 8-வது இடம்தான் பெற்றோம். அதன் விளைவாக, உலகக் கோப்பை போட்டிக்கு அப்போதே தகுதிபெற முடியாமல் போனது. ஆனால், நாம் இந்த இடத்துக்குத் தகுதியானவர்கள் இல்லை. அதோடு, நமக்கு ஆசியக் கோப்பை போட்டி மூலம் இன்னொரு வாய்ப்பு இருக்கிறது. அதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அப்போதே தீர்மானித்தோம். 2018 உலகக் கோப்பை வாய்ப்பை எட்டுவதற்கு இதுதான் கடைசி வாய்ப்பு என்று எங்களுக்குத் தெரியும். எனவே சொல்லிவைத்து அடித்துவிட்டோம்!” என்று சிரிக்கிறார்கள்.

‘ஷூட் அவுட்’டின்போது நெருக்கடி எதையும் உணர்ந்தீர்களா?’ என்று கேட்டால், “நாங்கள் அதற்கெல்லாம் பழகிவிட்டோம்” என்று சாதாரணமாகச் சொல்கிறார், தலைவி ராணி.

“இது எங்களுக்கு முதல்முறையல்ல. நாங்கள் கோல் அடிக்க வேண்டிய, சவிதா கோலை தடுக்க வேண்டிய ‘சடன் டெத்’ முறையை நாங்கள் ஏற்கனவே சந்தித்திருக்கிறோம். எனவே இது எங்களுக்கு நெருக்கடியை உண்டாக்கவில்லை” என்கிறார் அவர்.

வெற்றி மங்கைகளுக்கு நாமும் நமது வாழ்த்துகளைச் சொல்லிவிடுவோம்! 

Next Story