உலக ஆக்கி லீக் இறுதி சுற்று: இந்தியா-ஆஸ்திரேலியா ஆட்டம் ‘டிரா’


உலக ஆக்கி லீக் இறுதி சுற்று: இந்தியா-ஆஸ்திரேலியா ஆட்டம் ‘டிரா’
x
தினத்தந்தி 1 Dec 2017 11:15 PM GMT (Updated: 1 Dec 2017 9:23 PM GMT)

உலக ஆக்கி லீக் இறுதி சுற்று போட்டியில் நேற்று நடந்த இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

புவனேஸ்வரம்,

3-வது மற்றும் கடைசி உலக ஆக்கி லீக் இறுதி சுற்று போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. 10-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் அர்ஜென்டினா, பெல்ஜியம், நெதர்லாந்து, ஸ்பெயின் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, ஜெர்மனி, இங்கிலாந்து அணிகளும் இடம் பிடித்துள்ளன.

முதல் நாளான நேற்று ‘பி’ பிரிவில் 2 லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் இரவில் அரங்கேறிய மோதலில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மல்லுகட்டின. தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் கோல் அடிக்க தீவிரம் காட்டியதுடன், தாக்குதல் ஆட்டத்தை கடுமையாக தொடுத்தன. உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எல்லா வகையிலும் இந்தியா ஈடுகொடுத்து ஆடியதால், ஆட்டத்தில் அனல் பறந்தது.

20-வது நிமிடத்தில் இந்திய அணியின் முன்கள வீரர் மன்தீப்சிங் அபாரமாக கோல் அடித்தார். இந்த மகிழ்ச்சி சில வினாடிகள் மட்டுமே நீடித்தது. 21-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியா அணி பதில் கோல் திருப்பியது. பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி ஜெர்மி ஹேவர்ட் இந்த கோலை அடித்தார்.
அதன் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. முடிவில் இந்த ஆட்டம் யாருக்கும் வெற்றி தோல்வியின்றி 1-1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’வில் முடிந்தது. இந்திய கேப்டன் மன்பிரீத்சிங் சிங்குக்கு இது 200-வது ஆட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நடந்த மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனி 2-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை தோற்கடித்தது.

இன்று (சனிக்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டங்களில் அர்ஜென்டினா-பெல்ஜியம் (பகல் 12 மணி), நெதர்லாந்து-ஸ்பெயின் (பிற்பகல் 2 மணி), ஜெர்மனி-ஆஸ்திரேலியா (மாலை 5.30 மணி), இந்தியா-இங்கிலாந்து (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.

Next Story