அந்த 165 நாட்கள்...


அந்த 165 நாட்கள்...
x
தினத்தந்தி 2 Dec 2017 8:06 AM GMT (Updated: 2 Dec 2017 8:06 AM GMT)

உலக ஆக்கி லீக் இறுதிச்சுற்றில் விளையாடும் ருபீந்தர் பால் சிங்கின் அந்த 165 நாட்கள்...

‘165 நாட்கள் இடைவெளிக்குப் பின் மீண்டும் அணிக்குத் திரும்பியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ -உலக ஆக்கி லீக் இறுதிச்சுற்றில் விளையாடும் இந்திய அணிக்குத் திரும்ப அழைக்கப்பட்டது குறித்து, ருபீந்தர் பால் சிங் வெளியிட்ட டுவிட்டர் செய்தி இது.

நடுக்கள வீரரும் டிராக்பிளிக் ஸ்பெஷலிஸ்டுமான ருபீந்தர், தான் இந்திய அணியிலிருந்து விலகியிருந்த நாட்களை மிகச் சரியாக நினைவுகூர்ந்திருக்கிறார்.

கடந்த ஜூனில் நடைபெற்ற உலக ஆக்கி லீக் அரையிறுதிச் சுற்றுக்கு முன்பாக, வலது கால் பின்தொடை தசை நார்களில் ஏற்பட்ட காயம், இவரை களத்தை விட்டு ஒதுக்கிவைத்தது.

165 நாட்கள் என்ற ‘நீண்ட’ காலத்தின் ஒவ்வொரு நாளும் தனக்குக் கடினமாக இருந்ததாகக் கூறுகிறார், 27 வயதான ருபீந்தர்.

“நாம் தொடர்ந்து விளையாடிக்கொண்டிருக்கும்போது, அதுவும் ரசித்து அதில் ஈடுபட்டிருக்கும்போது, காயம் காரணமாக ஒரு குறிப்பிடத்தக்க காலம் விளையாட முடியாமல் போவது, விரக்தி அடையவைக்கும் விஷயம்” என்கிறார், ருபீந்தர்.

எப்போதுமே உடல்தகுதிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் ருபீந்தருக்கு, மேற்கண்ட காயம் ஒரு பெரும் பின்னடைவாக ஆகிவிட்டது. அதன் காரணமாகவே, சில முக்கியமான தொடர்களில் அவரால் விளையாட முடியாமல் போய்விட்டது. காயத்தின் வலி, அணிக்குத் திரும்பும் தனது உறுதியையும் உருக்குலைத்துவிடுமோ என்று ருபீந்தர் பயந் திருக்கிறார்.

“உண்மையைச் சொல்வதானால், சிலநேரங்களில் நமது ஊக்கம் வடிந்துவிடும். காயத்தின் ஆரம்பநாட்களில் நானும் அதை அனுபவித்தேன். நான் சிகிச்சை பெறத் தொடங்கிய முதல் 3 நாட்களிலேயே முன்னேற்றத்தை உணர்ந்தேன். ஆனால் நான்காவது நாளில் மறுபடி வலியெடுக்க, நமக்கு என்னதான் நடக்கப் போகிறது என்று தவித்துவிட்டேன். அப்போது பல்வேறு சிந்தனைகள் என் மனதை அலைக்கழித்தன. நம் காயம் சரியாகுமா, அப்படியே சரியானாலும் முழுமையாகக் குணமாகுமா, மறுபடி நம்மால் ஆக்கி விளையாட முடியுமா என்று ஏதேதோ எண்ணங்கள் ஓடிக்கொண்டே இருந்தன” என்று சொல்லும் ருபீந்தர்,

“ஆனால் நான் ஓரிடத்தில் முடங்கிக் கிடக்கவில்லை. நண்பர்களுடன் அதிக நேரத்தைக் கழித்தேன். அப்போது கவலை மறந்து சந்தோஷமாக இருந்தேன், பின்னங்கால் வைக்கத் தேவையில்லை என்று தோன்றியது” என்று கூறும் ருபீந்தர், இந்த மறுதொடக்கம், தனது வாழ்க்கையில் ‘ரீசெட் பட்டனை’ அழுத்தியது போல இருப்பதாகக் கூறுகிறார்.

“நான் புதிய பயிற்சியாளரின் தலைமையிலும் ஆடப் போகிறேன். எனவே எனக்கு இது ஒரு புத்தம்புது தொடக்கம்!” -ருபீந்தர் பால் சிங்கின் குரலில் உற்சாகம் தெறிக்கிறது.

இந்த உற்சாகம், களத்தில் எப்படி எதிரொலிக்கிறது எனப் பார்க்கலாம். 

Next Story