உலக ஆக்கி லீக்: அரைஇறுதியில் அர்ஜென்டினாவை சந்திக்கிறது, இந்தியா


உலக ஆக்கி லீக்: அரைஇறுதியில் அர்ஜென்டினாவை சந்திக்கிறது, இந்தியா
x
தினத்தந்தி 7 Dec 2017 8:30 PM GMT (Updated: 7 Dec 2017 7:28 PM GMT)

உலக ஆக்கி லீக் இறுதி சுற்று போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது.

புவனேஸ்வரம்,

உலக ஆக்கி லீக் இறுதி சுற்று போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஒரு கால்இறுதியில் ஒலிம்பிக் சாம்பியனும், நம்பர் ஒன் அணியுமான அர்ஜென்டினா 3–2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி அரைஇறுதியை எட்டியது. இங்கிலாந்து வீரர்கள் கிடைத்த 4 பெனால்டி கார்னர் வாய்ப்புகளை வீணாக்கியது பின்னடைவாக அமைந்தது.

ஜெர்மனி–நெதர்லாந்து இடையிலான மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் வழக்கமான நேரம் முடிவில் 3–3 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது. இதையடுத்து வெற்றி–தோல்வியை நிர்ணயிக்க கடைபிடிக்கப்பட்ட பெனால்டி ஷூட்–அவுட்டில் ஜெர்மனி 4–3 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.

இன்று (இரவு 7.30 மணி) நடைபெறும் முதலாவது அரைஇறுதியில் இந்திய அணி, அர்ஜென்டினாவை எதிர்கொள்கிறது. அர்ஜென்டினா முன்னணி வீரர் கோன்ஸலோ பெய்லாட் கூறும் போது, ‘இந்திய அணியை தோற்கடிப்பது மிகவும் கடினம். அவர்கள் ஆட்டத்தில் சரிவில் இருந்து எப்படி எழுச்சி பெறுவார்கள் என்பதை கணிக்க முடியாது. பெல்ஜியத்துக்கு எதிரான கால்இறுதி ஆட்டத்தின் போதே அதை நாங்கள் பார்த்தோம். மேலும் தாக்குதல் ஆட்டத்திலும் நன்றாக இருக்கிறார்கள். அதனால் நாங்கள் எச்சரிக்கையுடன் ஆட வேண்டியது அவசியம்’ என்றார்.

நாளை நடைபெறும் 2–வது அரைஇறுதியில் ஜெர்மனி–ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன.


Next Story