உலக ஆக்கி லீக்: அரைஇறுதியில் இந்தியா ஏமாற்றம் அர்ஜென்டினாவிடம் வீழ்ந்தது


உலக ஆக்கி லீக்: அரைஇறுதியில் இந்தியா ஏமாற்றம் அர்ஜென்டினாவிடம் வீழ்ந்தது
x
தினத்தந்தி 8 Dec 2017 9:45 PM GMT (Updated: 8 Dec 2017 9:22 PM GMT)

3–வது உலக ஆக்கி லீக் இறுதி சுற்று போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது.

புவனேஸ்வரம்,

3–வது உலக ஆக்கி லீக் இறுதி சுற்று போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த அரைஇறுதியில் உலக தரவரிசையில் 6–வது இடம் வகிக்கும் இந்திய அணி, ஒலிம்பிக் சாம்பியனும், ‘நம்பர் ஒன்’ அணியுமான அர்ஜென்டினாவுடன் பலப்பரீட்சையில் இறங்கியது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் களம் புகுந்த இந்திய வீரர்களால் பலம் வாய்ந்த அர்ஜென்டினாவின் கோல் பகுதிக்குள் அவ்வளவு எளிதில் நுழையமுடியவில்லை. சாதுர்யமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்ஜென்டினாவுக்கு 17–வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதை அந்த அணியின் கோன்ஸலோ பெய்லாட் கோலாக்கினார். முதல் பாதியில் இந்திய வீரர்கள் இலக்கை நோக்கி ஒரு ஷாட் கூட அடிக்கவில்லை.

ஆனால் பிற்பாதியில் பதிலடி கொடுக்க வீரர்கள் கடுமையாக போராடினர். இதற்கு மத்தியில் மழை தூறலும் விழுந்து கொண்டிருந்தது. மழை பெய்தாலும் ரசிகர்கள் குடைபிடித்தபிடி உற்சாகப்படுத்தினர். 36–வது நிமிடத்தில் இந்தியாவுக்கு அடுத்தடுத்து இரு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த பொன்னான வாய்ப்புகளை இந்திய வீரர் ருபிந்தர்பால்சிங் வீணாக்கி விட்டார். இதன் பிறகு அர்ஜென்டினா வீரர்கள் தடுப்பாட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தி இந்தியாவின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டனர். 58–வது நிமிடத்தில் அர்ஜென்டினா மேலும் ஒரு கோல் அடித்திருக்கும. அந்த அணி வீரர் மதியாஸ் பேரிட்ஸ் அடித்த பந்து, கோல் கம்பத்தில் பட்டு மயிரிழையில் வெளியே சென்று விட்டது.

மைதானத்தில் ஓரளவு தண்ணீர் தேங்கியிருந்ததால் வீரர்கள் வழக்கமான ஷாட்டுகளை அடிப்பதில் தடுமாறியதை காண முடிந்தது. முடிவில் அர்ஜென்டினா 1–0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை சாய்த்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த தொடரில் ஒரு முறை கூட இறுதி சுற்றை எட்டாத இந்திய அணி மீண்டும் ஏமாற்றி விட்டது.

இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 2–வது அரைஇறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவும், ஜெர்மனியும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். தோல்வி காணும் அணி வெண்கலப்பதக்கத்தை நிர்ணயிக்கும் 3–வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவை நாளை சந்திக்கும்.


Next Story