துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 16 Feb 2017 8:33 PM GMT (Updated: 16 Feb 2017 8:33 PM GMT)

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தலைமை செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் ஐ.சி.சி இணையதளத்தில் எழுதியுள்ள கட்டுரையில், ‘ஐ.சி.சி. நடுவர் குழுவை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

டி.ஆர்.எஸ். முறை: ஐ.சி.சி. மகிழ்ச்சி

ர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தலைமை செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் ஐ.சி.சி இணையதளத்தில் எழுதியுள்ள கட்டுரையில், ‘ஐ.சி.சி. நடுவர் குழுவை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். எல்லா போட்டிகளிலும் தவறுக்கு இடமின்றி சரியான தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பதே எங்களது பிரதான இலக்கு. டி.ஆர்.எஸ். தொழில்நுட்பம் நடுவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கிறது. இதன் மூலம் தற்போது சரியான முடிவுகள் எடுக்கப்படும் விகிதம் 94 சதவீதத்தில் இருந்து 98.5 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது’ என்றார்.

ஐ.பி.எல். தொடக்க விழா நடத்தும் நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடங்குவதற்கு முந்தைய நாள் தொடக்க விழா கோலாகலமாக நடைபெறும். தொடக்க விழாவை நடத்தும் பணி குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அடிப்படையில் வழங்கப்படும். இந்த நிலையில் அடுத்த 8 ஐ.பி.எல். தொடக்க விழாவை நடத்துவதற்கான உரிமத்தை பெறுவதற்கு முன்னணி நிறுவனங்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது. அதே நேரத்தில் சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. இதன்படி ஒப்பந்தத்தை பெற விரும்பும் நிறுவனங்கள் ஆண்டுக்கு ரூ.30 கோடிக்கு வர்த்தகம் செய்ய வேண்டும். உத்தரவாத தொகையை 35 சதவீதத்தை வங்கி கணக்கில் செலுத்த தயாராக இருக்க வேண்டும். முக்கியமாக குற்றப்பின்னணி எதுவும் இருக்கக்கூடாது. தொடக்க விழாவை எந்த மாதிரி நடத்த திட்டமிட்டுள்ளார்கள் என்பதை 45 நிமிடங்கள் வீடியோ காட்சியாக காண்பிக்க வேண்டும் போன்ற விதிமுறைகள் அடங்கிய வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது. யாருக்கு உரிமம் வழங்கப்படும் என்பது மார்ச் 1–ந்தேதி அறிவிக்கப்படும்.

தொழில்முறை குத்துச்சண்டை: சீன வீரரை சந்திக்கிறார், விஜேந்தர்

தொழில்முறை குத்துச்சண்டையில் வெற்றிகரமான வீரராக வலம் வரும் இந்திய வீரர் விஜேந்தர்சிங், ஆசிய பசிபிக் பட்டத்தை தக்க வைத்துள்ளார். இந்த நிலையில் விஜேந்தர்சிங் அடுத்த பட்டத்துக்காக ஒரியன்டல் சூப்பர் மிடில்வெயிட் சாம்பியன் சீனாவின் ஜூல்பிகர் மைமைடியாலியை எதிர்கொள்கிறார். இந்த ஆட்டம் ஏப்ரல் 1–ந்தேதி மும்பையில் அரங்கேறுகிறது. இந்திய மண்ணில் அவர் பங்கேற்கும் 3–வது தொழில்முறை குத்துச்சண்டை பந்தயம் இதுவாகும்.

பெங்களூருவில், டேவிஸ் கோப்பை டென்னிஸ்

டேவிஸ்கோப்பை டென்னிஸ் போட்டியில் ஆசிய ஓசியானியா குரூப்1 பிரிவில் நியூசிலாந்தை 4–1 என்ற கணக்கில் சாய்த்த இந்தியா அடுத்து உஸ்பெகிஸ்தானுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் பெங்களூருவில் ஏப்ரல் 7–ந்தேதி முதல் 9–ந்தேதி வரை நடைபெறும் என்று அகில இந்திய டென்னிஸ் சங்கம் நேற்று அறிவித்தது. இதில் வாகை சூடும் அணி உலக குரூப் பிளே–ஆப் சுற்றுக்கு முன்னேறும். இந்தியாவும், உஸ்பெகிஸ்தானும் இதுவரை 4 போட்டித் தொடர்களில் மோதி தலா 2–ல் வெற்றி பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

தென்ஆப்பிரிக்கா–நியூசிலாந்து மோதும் 20 ஓவர் கிரிக்கெட்

தென்ஆப்பிரிக்கா – நியூசிலாந்து அணிகள் இடையிலான ஒரே ஒரு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் இன்று நடக்கிறது. பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி மிக வலுவாக இருக்கிறது. ஆனால் உள்ளூரில் நியூசிலாந்து சவால் மிக்கது. அதனால் இந்த மோதலில் அனல் பறக்கும் என்று நம்பலாம். இந்திய நேரப்படி பகல் 11.30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது.


Next Story