உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் அங்குர் மிட்டல் தங்கப்பதக்கம் வென்று சாதனை


உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் அங்குர் மிட்டல் தங்கப்பதக்கம் வென்று சாதனை
x
தினத்தந்தி 24 March 2017 12:15 AM GMT (Updated: 23 March 2017 7:18 PM GMT)

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் அங்குர் மிட்டல் தங்கப்பதக்கம் வென்றதுடன், உலக சாதனையை சமன் செய்தார்.

அகாபுல்கோ,

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் (ஷாட்கன்) போட்டி மெக்சிகோ நாட்டில் உள்ள அகாபுல்கோவில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான டபுள் டிராப் பிரிவு போட்டியில் மொத்தம் 24 பேர் பங்கேற்றனர். தகுதி சுற்றில் ஜெர்மனி வீரர் லோ ஆன்ட்ரியாஸ் 150–க்கு 140 புள்ளிகள் குவித்து முதலிடத்துடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இந்திய வீரர் அங்குர் மிட்டல், சீன வீரர் யிங் கி ஆகியோர் தலா 138 புள்ளிகள் குவித்தனர். ஷூட்–ஆப்பில் இந்திய வீரர் அங்குர் மிட்டல் 6–5 என்ற கணக்கில் யிங் கியை வீழ்த்தி 2–வது இடத்துடன் இறுதிபோட்டிக்குள் நுழைந்தார். சமீபத்தில் டெல்லியில் நடந்த உலக போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற ஆஸ்திரேலிய வீரர் ஜேம்ஸ் வில்லெட் 135 புள்ளிகளுடன் 6–வது இடம் பெற்று இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தார்.

அங்குர் மிட்டலுக்கு தங்கம்

இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற 6 வீரர்கள் இடையே பதக்கம் வெல்வதில் கடும் போட்டி நிலவினாலும், இறுதிப்போட்டியில் இந்திய வீரர் அங்குர் மிட்டல் குறிதவறாமல் இலக்கை சுட்டு 80–க்கு 75 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். கடைசி 40 இலக்கில் அவர் இரண்டு முறை மட்டுமே தவற விட்டார். அத்துடன் அங்குர் மிட்டல் உலக சாதனையையும் சமன் செய்தார்.

ஆஸ்திரேலிய வீரர் ஜேம்ஸ் வில்லெட் 73 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கமும், சீன வீரர் யிங் கி 52 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கமும் வென்றனர். இந்த போட்டி தொடரில் இந்தியா வென்ற முதல் பதக்கம் இதுவாகும். கடந்த மாதம் டெல்லியில் நடந்த உலக போட்டியில் இதே பிரிவில் அரியானாவை சேர்ந்த 24 வயதான அங்குர் மிட்டல் வெள்ளிப்பதக்கம் வென்று இருந்தார். தற்போது முதல்முறையாக தங்கப்பதக்கம் வென்று அசத்தி இருக்கிறார்.

பழிதீர்ப்பா?

வெற்றிக்கு பிறகு இந்திய வீரர் அங்குர் மிட்டல் அளித்த பேட்டியில், ‘டெல்லியில் நடந்த உலக போட்டியில் ஜேம்ஸ் வில்லெட்டிடம் கண்ட தோல்விக்கு நான் பழிதீர்த்து விட்டேன் என்று சொல்லமாட்டேன். ஜேம்ஸ் மிகச்சிறந்த துப்பாக்கி சுடுதல் வீரர். போட்டியில் வெற்றி, தோல்விகள் எல்லாம் ஒரு அங்கமாகும். தகுதி சுற்றின் போது காற்றின் தாக்கத்தால் பாதிப்பு இருந்தது. ஆனால் இறுதிப்போட்டியில் சூழ்நிலை மிகவும் நன்றாக இருந்தது. இரண்டு இளம் வீரர்களுடன் பதக்க மேடையை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இளம் தலைமுறையினருக்கான போட்டி துப்பாக்கி சுடுதலாகும். மக்கள் பாராட்டும் வகையில் எங்களது சிறந்த திறமையை வெளிப்படுத்துகிறோம்’ என்று தெரிவித்தார்.


Next Story