துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 24 March 2017 10:00 PM GMT (Updated: 24 March 2017 6:29 PM GMT)

* ஐ.பி.எல். கிரிக்கெட்டில் புனே ரைசிங் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த

ஆஸ்திரேலிய ஆல்–ரவுண்டர் மிட்செல் மார்ஷ் காயம் காரணமாக விலகி விட்டதால், அவருக்கு பதிலாக தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் அந்த அணிக்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

*ஹாமில்டனில் இன்று தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் தென்ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் கைவிரலில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல் களம் இறங்க முடிவு செய்துள்ளார். ஆனால் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் அவர் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

*இந்தியா– ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டிகளை நடத்த இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி உரிய நிதியை வழங்கவில்லை என்று இமாச்சலபிரதேசம் உள்பட சில மாநில கிரிக்கெட் சங்கங்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தன. இதை நேற்று விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு ‘ஒப்பந்த விதிமுறைகளை மதித்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்த சம்பந்தப்பட்ட மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு உரிய நிதியை இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி உடனடியாக வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது. மேலும் ஏப்ரல் 5–ந் தேதி தொடங்க இருக்கும் ஐ.பி.எல். போட்டிகளை நடத்த விதிமுறைகளின் படி இந்திய கிரிக்கெட் வாரியம், ஐ.பி.எல். அணி நிர்வாகம், மாநில கிரிக்கெட் சங்கங்கள் ஆகியவை நடந்து கொள்ள வேண்டும் என்றும் கோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது.

*‘விராட் கோலி பேட்டிங்கில் சரியாக செயல்படாவிட்டாலும் அவரது தலைமைத்துவம் அணிக்கு மிகவும் முக்கியம். எனவே அவர் 50 சதவீத உடல்தகுதியுடன் இருந்தாலும் கூட கடைசி டெஸ்டில் விளையாட வேண்டும்’ என்று இந்திய முன்னாள் கேப்டன் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.

*உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு ரஷியாவில் நடக்கிறது. இதற்கான தென்அமெரிக்க கண்டத்துக்கான தகுதி சுற்றில் நேற்றைய ஒரு லீக் ஆட்டத்தில் பிரேசில் 4–1 என்ற கோல் கணக்கில் உருகுவேவை பதம் பார்த்தது. இடம் பெற்றுள்ள 10 அணிகளில் 30 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கும் பிரேசில் உலக கோப்பை தகுதி வாய்ப்பை நெருங்கியுள்ளது. மற்றொரு ஆட்டத்தில் 1–0 என்ற கோல் கணக்கில் சிலியை வீழ்த்திய அர்ஜென்டினா அணி இந்த பிரிவில் 22 புள்ளிகளுடன் 3–வது இடத்தில் உள்ளது. டாப்–4 அணிகள் நேரடியாக உலக கோப்பைக்கு தகுதி பெறும்.

*சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வரும் சீனியர் டிவிசன் லீக் கால்பந்து போட்டியில், சென்னை சிட்டி எப்.சி.–விவா சென்னை இடையிலான நேற்றைய ஆட்டம் 2–2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. முதல் டிவிசன் லீக் ஆட்டத்தில் ஒய்.எம்.எஸ்.சி. அணி 3–0 என்ற கோல் கணக்கில் ரங்கூன் எப்.சி.யை வீழ்த்தியது. இன்று நடக்கும் முதல் டிவிசன் லீக்கில் லெவன் வாரியர்ஸ்–ஏரோஸ் எப்.சி. (பிற்பகல் 2.30 மணி), சீனியர் டிவிசனில் மெட்ராஸ் ஸ்போர்ட்டிங் யூனியன்–இந்துஸ்தான் ஈகிள்ஸ் (மாலை 5 மணி) ஆகிய அணிகள் மோதுகின்றன.


Next Story