ஆசிய ஸ்குவாஷ் போட்டி கால்இறுதியில் ஜோஸ்னா, தீபிகா


ஆசிய ஸ்குவாஷ் போட்டி கால்இறுதியில் ஜோஸ்னா, தீபிகா
x
தினத்தந்தி 27 April 2017 9:30 PM GMT (Updated: 27 April 2017 8:59 PM GMT)

இந்திய ஸ்குவாஷ் பெடரேஷன் சார்பில் 19-வது ஆசிய தனிநபர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் 2 இடங்களில் நடந்து வருகிறது.

சென்னை,

இந்திய ஸ்குவாஷ் பெடரேஷன் சார்பில் 19-வது ஆசிய தனிநபர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் 2 இடங்களில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா 11-7, 11-9, 11-7 என்ற செட் கணக்கில் பிலிப்பைன்ஸ் வீராங்கனை ஜெம்கா அய்படோவை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சுனைனா குருவில்லா 6-11, 4-11, 6-11 என்ற செட் கணக்கில் ஹாங்காங் வீராங்கனை டாம் விங்கிடம் தோற்று வெளியேறினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் முன்னணி வீரர்கள் ஹரிந்தர் பால் சந்து 4-11, 11-6, 8-11, 11-6, 11-6 என்ற செட் கணக்கில் கத்தார் வீரர் அப்துல்லா அல் தமிமியையும், சவுரவ் கோசல் 11-8, 11-5, 11-2 என்ற நேர் செட் கணக்கில் முகமது அல்சராஜையும் (ஜோர்டான்) சாய்த்து கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தனர். மற்றொரு இந்திய வீரர் வேலவன் செந்தில்குமார் 1-11, 1-11, 8-11 என்ற நேர்செட்டில் மலேசியாவின் யுன் ஷே வென்னிடம் வீழ்ந்தார்.

ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தில் நேற்று மாலை ஆட்டம் நடந்த போது ஆடுகளத்தின் தரைதளத்தில் உள்ள மரக்கட்டையில் சேதம் ஏற்பட்டது. இதன் காரணமாக 3 ஆட்டங்கள் சேத்துப்பட்டில் உள்ள இந்திய ஸ்குவாஷ் அகாடமிக்கு மாற்றப்பட்டது. அங்கு நடந்த ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீராங்கனை தீபிகா பலிக்கல் 14-12, 11-5, 11-5 என்ற நேர் செட்டில் லீ ஆன்ட்ரியாவை (மலேசியா) விரட்டியடித்து கால்இறுதியை எட்டினார்.

Next Story