சர்வதேச வாள்வீச்சு போட்டி: தமிழக வீராங்கனை பவானிதேவி தங்கம் வென்று சாதனை


சர்வதேச வாள்வீச்சு போட்டி: தமிழக வீராங்கனை பவானிதேவி தங்கம் வென்று சாதனை
x
தினத்தந்தி 28 May 2017 8:12 PM GMT (Updated: 28 May 2017 8:11 PM GMT)

ஐஸ்லாந்து நாட்டில், சாட்டிலைட் சர்வதேச வாள்வீச்சு போட்டி நடந்தது. இதில் பங்கேற்ற இந்திய வீராங்கனையும், தமிழகத்தை சேர்ந்தவருமான சி.ஏ.பவானிதேவி, சாபர் பிரிவில் பங்கேற்றார்.

சென்னை,

ஐஸ்லாந்து நாட்டில், சாட்டிலைட் சர்வதேச வாள்வீச்சு போட்டி நடந்தது. இதில் பங்கேற்ற இந்திய வீராங்கனையும், தமிழகத்தை சேர்ந்தவருமான சி.ஏ.பவானிதேவி, சாபர் பிரிவில் பங்கேற்றார். தொடக்கத்தில் இருந்தே கடும் சவால்களை எதிர்கொண்ட அவர் அதை சமாளித்து இறுதிப்போட்டிக்கு வந்தார். நேற்று முன்தினம் நடந்த இறுதி சுற்றில் பவானிதேவி இங்கிலாந்தின் சாரா ஜேன் ஹாம்சனை 15–13 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். இதன் மூலம் சர்வதேச வாள்வீச்சில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார்.

சென்னையைச் சேர்ந்த பவானிதேவி கூறுகையில், ‘இந்த போட்டியில் நான் கலந்து கொண்டது இது 3–வது முறையாகும். முந்தைய இரு ஆண்டுகளில் கால்இறுதியில் தோல்வி அடைந்தேன். இந்த முறை கால்இறுதியில் இருந்து போட்டி கடினமாக இருந்தது. குறிப்பாக அரைஇறுதி மற்றும் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து வீராங்கனைகள் பலத்த நெருக்கடி கொடுத்தனர். இதனால் நான் கடுமையாக உழைக்க வேண்டி இருந்தது. ஆசிய மற்றும் காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டிகளில் நான் ஏற்கனவே பதக்கம் வென்றுள்ளேன். ஆனால் உலக அளவிலான ஒரு போட்டியில் எனது முதல் பதக்கம் இது தான்’ என்றார்.


Next Story