பேட்மிண்டன் ‘சாம்பியன்’ வீரர் சாய் பிரணீத்!


பேட்மிண்டன் ‘சாம்பியன்’ வீரர் சாய் பிரணீத்!
x
தினத்தந்தி 24 Jun 2017 6:50 AM GMT (Updated: 24 Jun 2017 6:50 AM GMT)

இந்தியாவின் புதிய சர்வதேச ‘சாம்பியன்’ வீரராக வளர்ந்து வருகிறார், பேட்மிண்டன் இளம்புயல் சாய் பிரணீத்.

தாய்லாந்து ஓபனில் வென்றபோது...

இந்த ஐதராபாத் வீரர், தனது முதல் கிராண்ட் பிரி போட்டி வெற்றியாக தாய்லாந்து ஓபன் பட்டத்தை சமீபத்தில் கைப்பற்றினார்.

ஜூனியர் வீரராக பல வெற்றிகளைக் குவித்திருக்கும் பிரணீத்துக்கு, சர்வதேச அளவில் கிடைத்திருக்கும் முதல் முக்கியமான வெற்றி இது.

கடந்த ஜனவரியில், இந்தியாவில் நடைபெற்ற கிராண்ட் பிரி போட்டியான சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் இறுதிச்சுற்றை முதல் முறையாக எட்டியிருந்தார், பிரணீத். ஆனால் காயம் காரணமாக அதில் சோபிக்க முடியாமல் போனது. அத்துடன், மிக முக்கியமான ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப், சுவிஸ் ஓபன் ஆகியவற்றையும் தவிர்க்க நேர்ந்தது.

பின்னடைவால் வந்த முன்னேற்றம்

சில நேரங்களில் வாழ்வில் ஏற்படும் பின்னடைவுகளும் புதிய வாய்ப்புகளை கொண்டுவரும். பிரணீத்துக்கும் அதுதான் நடந்தது.

காயத்தினால் விளையாடாமல் இருந்த இரண்டு மாத காலத்தில், தீவிர உடற் பயிற்சியில் ஈடுபட்டார் இவர்.

“நான் இரண்டு மாத காலம்தான் உடற்பயிற்சி செய்திருப்பேன். ஆனால் என்னுடைய உடல்தகுதி வெகுவாக உயர்ந்து விட்டது” என்கிறார்.
அது உண்மைதான் என்பது, பிரணீத் சர்வதேச பேட்மிண்டன் அரங்குக்குத் திரும்பியபோது புரிந்தது.

கடந்த ஏப்ரலில், சிங்கப்பூர் சூப்பர் சீரிஸ் பட்டத்தை பிரணீத் வென்றார். அது இவர் பெற்ற முதல் சூப்பர் சீரிஸ் பட்டம். இதற்காக இறுதிப்போட்டியில் இவர் வீழ்த்தியது, சக நாட்டு வீரரான ஸ்ரீகாந்தை.

ஸ்ரீகாந்துக்குப் பிறகு சூப்பர் சீரிஸ் பட்டம் வென்ற இரண்டாவது இந்திய பேட்மிண்டன் வீரர் என்ற பெருமை பிரணீத்துக்குக் கிட்டியது. ஆனால் இந்த வெற்றிக்காக சுமார் ஆறாண்டு காலம் காந்திருந்திருக்கிறார், பிரணீத்.

அத்தையின் வழியில்...

ஐதராபாத் அருகே உள்ள மவுலாலியைச் சேர்ந்த பிரணீத், தனது அத்தை ஒருவரைப் பார்த்துத்தான் பேட்மிண்டனுக்கு வந்தார். அவர் தேசிய அளவிலான வீராங்கனை. அவரைப் பின்பற்றி பிரணீத்தும் பேட்மிண்டன் ஆடலாம் என்று இவரது தாத்தா கருதினார்.

இப்படி சிறுவயதில் பிரணீத்தின் விருப்பம் எதுவும் அறியப்படாமல்தான் இவர் பேட்மிண்டனுக்கு கொண்டுவரப்பட்டார்.

ஆனால் வளர வளர, போட்டிகளில் வெற்றி வர வர இயல்பாகவே இவர் இந்த விளையாட்டில் தீவிரம் கொள்ள ஆரம்பித்துவிட்டார்.

10, 13, 16 மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவுகளில் பிரணீத் தேசிய சாம்பியன் ஆனார். 2010-ல் உலக ஜூனியர் பேட்மிண்டன் போட்டியில் வெண்கலப் பதக்கமும் வென்றார்.

அதன் அரையிறுதியில் தோல்வியைத் தழுவியபோதிலும், தற்போதைய உலக ‘நம்பர் 3’ வீரர் விக்டர் அக்ஸெல்சனுக்கு கடும் போட்டியைக் கொடுத்தார். அந்தக் காலகட்டத்தில், இந்திய இளம் பேட்மிண்டன் வீரர்களிலேயே மிகவும் திறமையானவராக பிரணீத் கருதப்பட்டார்.

சக வீரரின் பாராட்டு

பிரணீத்தின் சக பேட்மிண்டன் வீரரான பிரணாய், அவரைப் பற்றி பிரமித்துக் கூறுகிறார், “பிரணீத், அபாரமான கரங்களுக்குச் சொந்தக்காரர். நாங்கள் தினசரி கடுமையாகப் பயிற்சி செய்து விளையாட முடியாத ‘ஷாட்’களை கூட, இரண்டு மாத இடைவெளிக்குப் பின்னால் வந்தாலும் அவர் எளிதாக ஆடுவார். ‘ஹாப் ஸ்மாஷ்’, ‘டிராப்’, ‘டிரிபிள்’ எல்லாவற்றையும் அவர் சிறப்பாகவும், எளிதாகவும் விளையாடுவார்.”

ஆனால், உயர்மட்ட நிலையில் பிரணீத்துக்கு வெற்றி என்பது எளிதாக வரவில்லை. அதில் மின்னலைப் போல அங்கொன்றும் இங்கொன்றுமாக சில அற்புதத் தருணங்கள் வாய்த்தபோதும். உதாரணத்துக்கு, கடந்த ஆண்டு ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப்பில் நடப்பு உலக ‘நம்பர் 1’ வீரர் லீ சோங் வீயை நேர் செட்களில் பிரணீத் வீழ்த்தினார். தவிர, ஒன்றிரண்டு சேலஞ்சர் போட்டிகளில் வென்றார்.

சர்வதேச அரங்கில் ஓர் அசத்தல் வெற்றி மகுடம் என்பது பிரணீத்துக்கு கைகூடாமலே இருந்தது. பல போட்டிகளில் போராடித் தோற்றார்.
அதோடு, தன்னுடன் இணைந்து பயிற்சி பெறும் சக ஐதராபாத் வீரரான ஸ்ரீகாந்த், 2014-ல் உலகின் நான்காவது ரேங்க் வீரராக உயர்ந்ததையும் பிரணீத் பார்த்தார்.
ஆனால் ஸ்ரீகாந்தின் உயர்வு, தனக்கு ஊக்கம் அளித்ததாகவே கூறுகிறார், பிரணீத்.

“நாங்கள் ஒன்றாக சேர்ந்து பயிற்சி பெறுகிறோம். எனவே சக வீரர் உயரே போவது, எங்களைப் போன்ற எல்லா வீரர்களுக்குமே ஓர் உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும்தானே தரும்?” என்கிறார்.

தாய்லாந்து ஓபன் சாதனை

பெரிய சர்வதேச வெற்றிகள் பெறாமல் இருந்த பிரணீத்தின் கதை, சிங்கப்பூரில் மாறியது. சிங்கப்பூர் சூப்பர் சீரிசில் வென்று, தனது திறமையை வெளிக்காட்டினார்.

அடுத்து சுமார் ஒரு மாதமே கடந்த நிலையில் தாய்லாந்து ஓபன் சவால் பிரணீத்துக்கு வந்தது. அதில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியவர், இந்தோனேசிய வீரர் ஜோனாதன் கிறிஸ்டியை எதிர்கொண்டார்.
சிங்கப்பூர் இறுதிப்போட்டியைப் போல இங்கும் பிரணீத் முதல் கேமை இழந்துவிட்டார். ஆனால் நிதானத்தையும் நம்பிக்கையையும் இழக்காத அவர், கடைசியில் 17-21, 21-18, 21-19 என்ற செட்களில் வென்றார்.

“என்னால் நெருக்கடியை கையாள முடியும் என்று எனக்குத் தெரியும். முதல் கேமை இழந்துவிட்டதாலேயே நாம் ஒன்றும் ஆட்டத்தை இழந்துவிடவில்லை என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். இன்னும் இரண்டு கேம் இருக்கிறது என்று, முதல் கேமை மறந்து நான் விளையாடினேன்” என்று ரகசியம் சொல்கிறார், பிரணீத்.

போட்டியின்போது எந்த ஆர்ப்பாட்டத்தையும் வெளிக்காட்டாத இவர், போட்டி முடிந்தபின் கைகள் இரண்டையும் விரித்தபடி பறவையைப் போல களத்தில் சுற்றி ஓடிவந்தார்.

அதிகரிக்கும் நம்பிக்கை

“இந்த வெற்றிக்குப் பின்பு எனது தன்னம்பிக்கை, விளையாட்டை நான் அணுகும்விதம் எல்லாம் முற்றிலுமாக மாறியிருக்கின்றன. இப்போது நான் என் மீதே அதிக நம்பிக்கை வைக்கிறேன். தாய்லாந்து ஓபன் போன்ற பெரிய வெற்றிகள் வரும்போது எல்லாமே தானாக மாறத் தொடங்கும்” என்கிற பிரணீத் குரலில் நிம்மதி கலந்த தெளிவு தெரிகிறது.

பிரணீத் கூறும் நல்ல மாற்றங்களில் ஒன்று, அவரது தரநிலை உயர்வு. இந்த ஆண்டின் தொடக்கத்தில் உலக அளவில் 34-வது ரேங்கில் இருந்த பிரணீத், தனது பேட்மிண்டன் வாழ்விலேயே சிறந்த தரநிலையாக 15-க்கு உயர்ந்திருக்கிறார்.

பல சரிவுகளைச் சந்தித்தபோதிலும், சக இந்திய வீரர்கள் விர்ரென்று ஏணிப் படியில் உயர்ந்துகொண்டு போனபோதிலும், தன் மீதான நம்பிக்கையை மட்டும் தான் இழக்கவில்லை என்று சொல்கிறார், பிரணீத்.

“ஒருநாள் நானும் சர்வதேசப் பட்டங்களை வெல்வேன் என்று எனக்குத் தெரியும். நாம் எந்தப் போட்டியிலும் வெற்றி பெறாதபோது, ஏதாவது ஒரு போட்டியிலாவது வெல்லமாட்டோமா என்று எண்ணுவோம். ஆனால் ஒரு பெரிய வெற்றியைப் பெற்றபின், சரி, நம்மால் இதையும் சாதிக்க முடிகிறது, எனவே இதைப் போல மேலும் வெற்றி களைப் பெற முயல்வோம் என்று நினைப்போம். அந்த எண்ணம்தான் எனக்குள்ளும் தற்போது ஓடுகிறது!” என்று இயல்பாகச் சொல்கிறார், சாய் பிரணீத்.

சரி சாய் பிரணீத், உங்களிடம் நாங்களும் பல சர்வதேச சாம்பியன் பட்டங்களை எதிர்பார்க் கிறோம்.


Next Story