மாநில சீனியர் தடகளம் வட்டு எறிதலில் மித்ரவருண் புதிய சாதனை


மாநில சீனியர் தடகளம் வட்டு எறிதலில் மித்ரவருண் புதிய சாதனை
x
தினத்தந்தி 24 Jun 2017 8:42 PM GMT (Updated: 24 Jun 2017 8:42 PM GMT)

மாநில சீனியர் தடகள போட்டியில் ஆண்களுக்கான குண்டு எறிதலில் மித்ரவருண் புதிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார்.

சென்னை,

மாநில சீனியர் தடகள போட்டியில் ஆண்களுக்கான குண்டு எறிதலில் மித்ரவருண் புதிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார்.

மாநில தடகளம்

சென்னை மாவட்ட தடகள சங்கம் சார்பில், 90–வது மாநில சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நேரு ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் டி.கே.ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்ததுடன், வீரர்–வீராங்கனைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

தமிழ்நாடு தடகள சங்க தலைவர் டபிள்யூ.ஐ.தேவாரம், சீனியர் துணைத்தலைவர் சி.சைலேந்திரபாபு, பொருளாளர் சி.லதா, துணைத்தலைவர் ஷைனி வில்சன், அரைஸ் ஸ்டீல் நிர்வாகி ஆதவா அர்ஜூன் உள்பட பலர் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்.

கனிமொழி முதலிடம்

இதில் முதல் நாளான நேற்று நடந்த ஆண்களுக்கான வட்டு எறிதலில் அரைஸ் ஸ்டீல் அகாடமி வீரர் மித்ரவருண் 47.14 மீட்டர் தூரம் வீசி புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் அரைஸ் ஸ்டீல் அகாடமி வீரர் யோகேஷ் முதலிடமும், போல்வால்ட் பந்தயத்தில் சேலம் வீரர் கோகுல்நாத் முதலிடமும், 1,500 மீட்டர் ஓட்டத்தில் செயின்ட் ஜோசப்ஸ் அகாடமி வீரர் ரகுராம் முதலிடமும், உயரம் தாண்டுதலில் இந்தியன் வங்கி வீரர் மோதி அருண் முதலிடமும், டிரிபிள் ஜம்ப் பந்தயத்தில் அரைஸ் ஸ்டீல் அகாடமி வீரர் கனகராஜ் முதலிடமும், 110 மீட்டர் தடை ஓட்டத்தில் சுரேந்தர் முதலிடமும் பிடித்தனர்.

பெண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் எஸ்.டி.ஏ.டி. வீராங்கனை இக்னேஷ்சும், ஈட்டி எறிதலில் வேலூர் வீராங்கனை ஹேமமாலினியும், டிரிபிள்ஜம்ப் பந்தயத்தில் அரைஸ் வீராங்கனை சத்யாவும், 1,500 மீட்டர் ஓட்டத்தில் எஸ்.டி.ஏ.டி. வீராங்கனை பிரியாவும், குண்டு எறிதலில் செயின்ட் ஜோசப்ஸ் அகாடமி வீராங்கனை நந்தினியும், 100 மீட்டர் தடை ஓட்டத்தில் கனிமொழியும் 100 மீட்டர் ஓட்டத்தில் இந்தியன் வங்கியின் சத்ரா லேகாவும், 400 மீட்டர் ஓட்டத்தில் ஈரோடு வீராங்கனை வித்யாவும் முதலிடம் பெற்றனர்.

இன்று 2–வது மற்றும் கடைசி நாள் பந்தயங்கள் நடக்கிறது.


Next Story