ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் ஸ்ரீகாந்த் ‘சாம்பியன்’ ஒலிம்பிக் சாம்பியனை வீழ்த்தினார்


ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் ஸ்ரீகாந்த் ‘சாம்பியன்’ ஒலிம்பிக் சாம்பியனை வீழ்த்தினார்
x
தினத்தந்தி 25 Jun 2017 9:30 PM GMT (Updated: 25 Jun 2017 7:33 PM GMT)

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டனில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் நேர் செட்டில் ஒலிம்பிக் சாம்பியன் சீனாவின் சென் லாங்கை சாய்த்து பட்டத்தை கைப்பற்றினார்.

சிட்னி,

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டனில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் நேர் செட்டில் ஒலிம்பிக் சாம்பியன் சீனாவின் சென் லாங்கை சாய்த்து பட்டத்தை கைப்பற்றினார்.

ஆஸ்திரேலிய ஓபன்

ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடர் ஒரு வார காலமாக சிட்னி நகரில் நடந்து வந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 11–வது இடம் வகிக்கும் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்தும், 6–ம் நிலை வீரரான ஒலிம்பிக் சாம்பியனும், இரட்டை உலக சாம்பியனுமான சீனாவின் சென் லாங்கும் கோதாவில் இறங்கினர்.

வலுமிக்க வீரராக வர்ணிக்கப்படும் சென் லாங் எளிதில் வெற்றி பெறுவார் என்பதே பெரும்பாலானவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் அதற்கு நேர்மாறாக ஆட்டத்தின் போக்கு வியப்புக்குரிய வகையில் மாறியது.

ஸ்ரீகாந்த் சாம்பியன்

இதில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் தொடக்கம் முதலே ஆக்ரோ‌ஷமாக விளையாடினார். இருவரும் மாறி மாறி புள்ளிகளை சேர்த்த வண்ணம் இருந்தனர். 14–14, 15–15, 20–20 என்று எல்லாம் சமநிலை நீடித்ததால் ஆட்டத்தில் அனல் பறந்தது. இதன் பிறகு கடைசி இரு கேம்களை தனதாக்கி இந்த செட்டை ஒரு வழியாக ஸ்ரீகாந்த் வசப்படுத்தினார்.

2–வது செட்டில் சென் லாங் பெரிய அளவில் சோதனை கொடுக்கவில்லை. ஆரம்பத்தில் இருந்தே ஓரளவு முன்னிலை பெற்ற ஸ்ரீகாந்த் அதை கடைசி வரை அப்படியே தக்க வைத்துக் கொண்டார். 20–16 என்று இருந்த போது, எதிராளி பந்தை லைனுக்கு வெளியே அடித்த விட ஸ்ரீகாந்தின் வசம் வெற்றிக்கனி கனிந்தது.

46 நிமிடங்கள் நடந்த இந்த மோதலில் ஸ்ரீகாந்த் 22–20, 21–16 என்ற நேர் செட்டில் சென் லாங்கை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கினார். கடந்த வாரம் இந்தோனேஷிய ஓபனில் மகுடம் சூடிய ஸ்ரீகாந்த் அதன் தொடர்ச்சியாக இப்போது ஆஸ்திரேலிய ஓபனிலும் பிரமாதப்படுத்தியுள்ளார்.

முதல் முறையாக...

இந்த தொடரில் 2–வது சுற்றில் அவர் ‘நம்பர் ஒன்’ வீரர் தென்கொரியாவின் சன் வான் ஹோவை தோற்கடித்ததும் குறிப்பிடத்தக்கது. 42 ஆண்டுகால ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் வரலாற்றில் இந்திய வீரர் ஒருவர் பட்டத்தை உச்சிமுகர்வது இதுவே முதல் முறையாகும். அதே சமயம் இந்திய வீராங்கனைகளில் சாய்னா நேவால் இங்கு இரண்டு முறை (2014, 2016–ம் ஆண்டு) பட்டத்தை வென்று இருக்கிறார்.

ஸ்ரீகாந்த், தனது வாழ்க்கையில் சென் லாங்கை வீழ்த்தியது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு அவருக்கு எதிராக ஆடிய 5 ஆட்டங்களிலும் தோல்வியே கண்டிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

வாகை சூடிய ஸ்ரீகாந்த் ரூ.36 லட்சத்தை பரிசுத்தொகையாக பெற்றார். அவருக்கு இது 4–வது சூப்பர் சீரிஸ் பட்டமாகும். ஏற்கனவே சீன ஓபன் (2014), இந்திய ஓபன் (2015), இந்தோனேஷிய ஓபன் (2017) ஆகிய சூப்பர் சீரிஸ் பட்டங்களை சுவைத்து இருக்கிறார்.

சொல்வது என்ன?

ஐதராபாத்தை சேர்ந்த 24 வயதான ஸ்ரீகாந்த் கூறுகையில், ‘வெற்றியோ அல்லது தோல்வியோ அதை பற்றி நான் அதிகமாக சிந்திக்கவில்லை. காயத்தால் நிறைய போட்டிகளை நான் தவற விட்டு இருக்கிறேன். அதனால் ஆட்டத்தை உற்சாகமாக அனுபவித்து விளையாட வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது. அப்படிதான் விளையாடினேன். ஆட்டத்தின் போது கிடைத்த ஓய்வை எனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டேன். முட்டாள்தனமான தவறுகளை செய்து எதிராளியின் கையை ஓங்க வைத்து விடாதே என்று பயிற்சியாளர் அறிவுரை வழங்கினார். ஒவ்வொரு போட்டிக்கும் கடினமாக உழைக்கிறேன். சில சமயம் அதற்கு பலன் கிடைக்காமலும் போய் விடுகிறது. இங்கு சாதித்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.

தோல்வி அடைந்த சென் லாங்குக்கு ரூ.18 லட்சம் பரிசாக கிடைத்தது. அவர் கூறுகையில், ‘நான் சிட்னிக்கு வந்த போது, வயிற்று போக்கால் பாதிக்கப்பட்டேன். அதனால் உடல்ரீதியாக நான் சிறந்த நிலையில் இல்லை என்பதே உண்மை. இருப்பினும் இறுதிசுற்றை எட்டிய பிறகு தொடர்ந்து விளையாடி, முடிந்த வரை முயற்சிக்க வேண்டும் என்று எண்ணினேன். ஆனால் வெற்றி கிடைக்கவில்லை. சீனா திரும்பியதும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்பேன்’ என்றார்.

பிரதமர் வாழ்த்து

சாதனை படைத்த ஸ்ரீகாந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘உங்களின் இந்த வெற்றியால் உண்மையிலேயே நாங்கள் அனைவரும் பெருமைப்படுகிறோம்’ என்று மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதே போல் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி விஜய் கோயல், மேற்கு வங்காள முதல்–மந்திரி மம்தா பானர்ஜி, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், ஷேவாக், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா உள்ளிட்டோரும் அவரை வாழ்த்தியுள்ளனர்.

அவரை வெகுவாக பாராட்டியுள்ள இந்திய பேட்மிண்டன் சம்மேளனம் ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது.

சீன வீராங்கனை

இந்த போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் வீராங்கனை நோஜோமி ஒகுஹரா 21–12, 21–23, 21–17 என்ற செட் கணக்கில் சக நாட்டவர் யமாகுச்சியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தைச் தட்டிச்சென்றார். பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட தனது சொந்த நகரான நகனோவுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிப்பதாக அவர் கூறினார்.


Next Story