‘வெற்றி பெற வேண்டும் என்பதே எனது குறிக்கோள்’ பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த் பேட்டி


‘வெற்றி பெற வேண்டும் என்பதே எனது குறிக்கோள்’ பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த் பேட்டி
x
தினத்தந்தி 27 Jun 2017 10:45 PM GMT (Updated: 27 Jun 2017 8:40 PM GMT)

‘பேட்மிண்டன் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதே தனது குறிக்கோள்’ என்று இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கூறினார்.

ஐதராபாத்,

சமீபத்தில் நடந்த இந்தோனேஷிய ஓபன் சூப்பர் சீரிஸ், ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் போட்டி ஆகியவற்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் தொடர்ச்சியாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். அடுத்தடுத்து 2 பட்டங்களை வென்ற ஸ்ரீகாந்த் மற்றும் இந்த போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர்கள் பிரனாய், சாய் பிரனீத் ஆகியோர் நேற்று ஐதராபாத் திரும்பினார்கள். விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் உலக தர வரிசையில் 11-வது இடத்துக்கு முன்னேறி இருக்கும் 24 வயதான ஸ்ரீகாந்த் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

உலக தர வரிசையில் ‘டாப்-10’-க்குள் வருவது என்பது நல்ல விஷயமாகும். ஆனால் டாப்-10 வரிசைக்குள் வர வேண்டும் என்பதற்காக நான் இந்த போட்டிகளில் விளையாடவில்லை. வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே விளையாடினேன். ஆகஸ்டு மாதம் நடைபெற இருக்கும் உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் நிச்சயமாக வெற்றிக்காகவே விளையாடுவேன். வெற்றி பெற வேண்டும் என்பது மட்டுமே எனது சிந்தனையாகும். தர வரிசையை பற்றி நான் கவலைப்படுவதில்லை.

கணுக்கால் காயத்தில் இருந்து மீண்டு வந்து இந்த வெற்றியை பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு மட்டுமின்றி பிரனாய், சாய் பிரனீத் ஆகியோருக்கும் கடந்த 2 வாரங்கள் மிகவும் சிறப்பானதாகும். பிரனாய் உண்மையிலேயே மிகவும் அபாரமாக செயல்பட்டார். அவர் முன்னணி வீரர்களான ஷோங் வெய், சென் லாங் ஆகியோரை வீழ்த்தினார். இதுபோல் முன்பு ஒருபோதும் நடந்தது கிடையாது. இதற்காக பிரனாய்யை நான் பாராட்டுகிறேன்.

காயம் அடைந்த பிறகு உடனடியாக போட்டிக்கு திரும்ப வேண்டும் என்று நான் அவசரப்படவில்லை. முதலில் பயிற்சிக்கு திரும்புவதில் மட்டுமே ஆர்வம் காட்டினேன். அதன் பிறகு உடல் தகுதி நல்ல நிலையை எட்டியதை உணர்ந்ததும் போட்டிகளில் விளையாட ஆரம்பித்தேன். பயிற்சியாளரின் உதவியால் தான் என்னால் இந்த வெற்றிகளை பெற முடிந்தது. கடந்த சில மாதங்களாக நான் மிகவும் நன்றாக விளையாடி வருகிறேன். இதே மாதிரி சிறப்பாக தொடர்ந்து விளையாட வரும் மாதங்களில் கடினமான பயிற்சி மேற்கொள்வேன். எல்லா வெற்றிகளுமே எனக்கு முக்கியமானது தான். இந்த வெற்றியை முந்தைய வெற்றியுடன் ஒப்பிட்டு பார்க்க விரும்பவில்லை. ஒலிம்பிக் சாம்பியன் சென் லாங்கை வீழ்த்தியது எனது மிகப்பெரிய வெற்றியாக கருதுகிறேன். எனக்கு ஆதரவு அளித்த பயிற்சியாளர் கோபிசந்த், இந்திய பேட்மிண்டன் சம்மேளனம், அரசு ஆகியோருக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story