புரோ கபடி லீக்: கடைசி நிமிடத்தில் வெற்றியை கோட்டை விட்டது, தமிழ் தலைவாஸ்


புரோ கபடி லீக்:  கடைசி நிமிடத்தில் வெற்றியை கோட்டை விட்டது, தமிழ் தலைவாஸ்
x
தினத்தந்தி 17 Aug 2017 10:45 PM GMT (Updated: 17 Aug 2017 7:53 PM GMT)

புரோ கபடி போட்டியில், டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி நிமிடத்தில் தமிழ் தலைவாஸ் அணியை வெற்றியை கோட்டை விட்டு தோல்வி அடைந்தது.

ஆமதாபாத்,

5–வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணியுடன் தலா 2 முறையும், அடுத்த பிரிவில் உள்ள அணியுடன் ஒருமுறையும் வேண்டும்.

ஆமதாபாத்தில் நேற்றிரவு நடந்த 32–வது லீக் ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் தமிழ் தலைவாஸ் அணி, ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள தபாங் டெல்லியை எதிர்கொண்டது. தொடக்கத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் ஆக்ரோ‌ஷமாக மல்லுகட்டினர். மாறி மாறி புள்ளிகளை எடுத்த வண்ணம் இருந்ததால் முதல் பாதி 12–12 என்ற புள்ளி கணக்கில் சமன் ஆனது.

2–வது பாதியில் தமிழ் தலைவாஸ் வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். குறிப்பாக கேப்டன் அஜய் தாகூர் ரைடு மூலம் நிறைய புள்ளிகளை சேகரித்தார். ஒரு கட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 27–23 என்று வலுவான முன்னிலை வகித்தது. ஆனால் போக போக டெல்லி அணியினர் சரிவில் இருந்து மீண்டனர். ஆட்டம் முடிவடைய ஒரு நிமிடம் இருந்த போது தமிழ் தலைவாஸ் அணி 28–27 என்று மயிரிழையில் முன்னிலை பெற்றிருந்தது.

அந்த சமயத்தில் ரைடுக்கு சென்ற டெல்லி வீரர் மிராஜ்ஷேக் ஒரே நேரத்தில் தமிழ் தலைவாஸ் அணியின் 3 வீரர்களை அவுட் செய்து, ஆட்டத்தை தங்களுக்கு சாதகமாக திருப்பினார். இதன் பின்னர் அஜய் தாகூர் ஒரு புள்ளி எடுத்தும் பலன் இல்லை.

திரிலிங்கான ஆட்டத்தின் முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 29–30 என்ற புள்ளி கணக்கில் தோல்வியை தழுவியது. அதிகபட்சமாக தமிழ் தலைவாஸ் அணியில் கேப்டன் அஜய் தாகூர் 14 புள்ளிகளும், டெல்லி அணியில் மிராஜ் ஷேக் 9 புள்ளிகளும் எடுத்தனர். 5–வது ஆட்டத்தில் ஆடிய தமிழ் தலைவாசுக்கு இது 3–வது தோல்வியாகும். 6–வது ஆட்டத்தில் விளையாடிய டெல்லிக்கு 2–வது வெற்றியாகும்.

குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ்– பெங்கால் வாரியர்ஸ் அணிகள் இடையிலான மற்றொரு பரபரப்பான ஆட்டம் 26–26 என்ற புள்ளி கணக்கில் டையில் (சமன்) முடிந்தது.

இன்றைய ஆட்டங்களில் உத்தரபிரதேச யோத்தா– மும்பை (இரவு 8 மணி), பெங்களூரு புல்ஸ்– ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.


Next Story