தென் மண்டல துப்பாக்கி சுடுதல் போட்டி சென்னையில் நடக்கிறது


தென் மண்டல துப்பாக்கி சுடுதல் போட்டி சென்னையில் நடக்கிறது
x
தினத்தந்தி 19 Aug 2017 9:30 PM GMT (Updated: 19 Aug 2017 9:30 PM GMT)

தென் மண்டல துப்பாக்கி சுடுதல் போட்டி சென்னையில் வருகிற 22–ந் தேதி தொடங்குகிறது.

சென்னை,

தென் மண்டல துப்பாக்கி சுடுதல் போட்டி சென்னையில் வருகிற 22–ந் தேதி தொடங்குகிறது.

தென் மண்டல துப்பாக்கி சுடுதல்

சென்னை ரைபிள் கிளப் சார்பில், தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் (ரைபிள் மற்றும் பிஸ்டல்) சங்கம் ஆதரவுடன் 9–வது தென் மண்டல துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை ஆவடி வீராபுரத்தில் உள்ள தமிழ்நாடு சிறப்பு போலீஸ் 3–வது பட்டாலியனில் உள்ள போலீஸ் துப்பாக்கி சுடுதல் ரேஞ்சில் வருகிற 22–ந் தேதி முதல் 26–ந் தேதி வரை நடக்கிறது.

இந்த போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி, அந்தமான் நிக்கோபர் தீவு ஆகியவைகளில் இருந்து சுமார் 700 வீரர்–வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். இதில் சர்வதேச மற்றும் தேசிய போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் பலர் கலந்து கொள்கிறார்கள். இந்த போட்டியில் இந்திய ரைபிள் சங்கம் நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச தகுதி புள்ளியை பெறும் வீரர்–வீராங்கனைகள் திருவனந்தபுரத்தில் வருகிற டிசம்பர் மாதம் நடைபெறும் தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.

மாநில அளவிலான போட்டி

43–வது மாநில துப்பாக்கி சுடுதல் (ஷாட்கன்) போட்டி சென்னையை அடுத்த அலமாதியில் உள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் டிராப் அண்ட் ஸ்கீட் சூட்டிங் ரேஞ்சில் செப்டம்பர் 1–ந் தேதி முதல் 4–ந் தேதி வரை நடக்கிறது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து 200 பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த போட்டியில் குறைந்தபட்ச தகுதி புள்ளியை பெறும் வீரர்–வீராங்கனைகள், ஐதராபாத்தில் செப்டம்பர் 9–ந் தேதி முதல் 14–ந் தேதி வரை நடைபெறும் தென்மண்டல துப்பாக்கி சுடுதல் (ஷாட்கன்) சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவார்கள்.

இந்த தகவலை சென்னை ரைபிள் கிளப் செயலாளர் டி.வி.சீத்தாராமராவ் சென்னையில் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார். அப்போது சென்னை ரைபிள் கிளப் பொருளாளர் ஆர்.ரவிகிருஷ்ணன், இணைசெயலாளர் எம்.கோபிநாத், ஆயுதப்படை கூடுதல் டி.ஜி.பி. ‌ஷகில் அக்தர் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story