புரோ கபடி லீக் ‘தமிழ் தலைவாஸ் அணி ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்’


புரோ கபடி லீக் ‘தமிழ் தலைவாஸ் அணி ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்’
x
தினத்தந்தி 9 Sep 2017 11:30 PM GMT (Updated: 9 Sep 2017 8:00 PM GMT)

‘புரோ கபடி லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்’ என்று பயிற்சியாளர் பாஸ்கரன் நம்பிக்கை தெரிவித்தார்.

சென்னை,

5-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணியுடன் 2 முறையும், எதிர் பிரிவில் உள்ள அணியுடன் ஒரு முறையும் லீக் ஆட்டத்தில் மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறும்.

மொத்தம் 132 லீக் ஆட்டங்களில் நேற்று வரை 70 ஆட்டங்கள் அரங்கேறி இருக்கின்றன. ‘பி’ பிரிவில் இடம் பிடித்து இருக்கும் அறிமுக அணியான தமிழ் தலைவாஸ் இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 6 தோல்வி, 2 டையுடன் 16 புள்ளிகள் பெற்று தனது பிரிவில் கடைசி இடத்தில் இருக்கிறது.

இந்த நிலையில் தமிழ் தலைவாஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் கே.பாஸ்கரன் ‘தினத்தந்தி’க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஆட்ட வியூகம் கடைசி நிமிடத்தில் சாதகமாக அமையாமல் போவதே எங்கள் அணியின் தோல்விக்கு காரணமாகும். தோல்வி வருத்தம் அளித்தாலும் அதனை கண்டு வீரர்கள் துவண்டு போய்விடவில்லை. நாங்கள் அதிக புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வி காணவில்லை. நெருக்கடியாக போட்டி அளித்து தான் தோல்வியை சந்தித்துள்ளோம்.

எங்கள் அணியினர் எல்லா ரைடுகளிலும் புள்ளி எடுக்க 80 சதவீதம் முயற்சித்து வருகிறார்கள். 3-வது ரைடில் (டூ ஆர் டை) 100 சதவீதம் புள்ளி சேகரிக்க முயற்சித்து வருகிறோம். அணியில் 3 அல்லது 4 பேர் இருக்கும் போது முக்கியமான கட்டத்தில் ரைடில் புள்ளி சேர்ப்பதில் அதிக அக்கறை காட்டாமல் விரைவில் வீரர்கள் திரும்புகிறார்கள். போனஸ் புள்ளி எடுப்பதில் வீரர்களின் செயல்பாடுகள் நன்றாக தான் இருக்கிறது. இருப்பினும் எதிரணியின் ஆட்ட வியூகம் கடுமையாக இருக்கையில் போனஸ் புள்ளி எடுப்பது என்பது எளிதான காரியம் இல்லை.

எங்களுக்கு இன்னும் 13 லீக் ஆட்டங்கள் இருக்கிறது. அதில் சென்னையில் நடைபெறும் 6 ஆட்டங்களும் (வருகிற 29-ந் தேதி முதல் அக்டோபர் 5-ந் தேதி வரை) அடங்கும். எங்களது தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து, அதனை வெற்றிகரமானதாக மாற்ற முயற்சி எடுத்து வருகிறோம். எங்களது முயற்சிக்கு நிச்சயம் பலன் கிடைக்கும். எங்கள் அணி சிறப்பாக செயல்பட்டு அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்’) தகுதி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இன்னும் இருக்கிறது.
இவ்வாறு பாஸ்கரன் கூறினார்.

Next Story