புரோ கபடி லீக்: பரபரப்பான ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி


புரோ கபடி லீக்: பரபரப்பான ஆட்டத்தில்  தமிழ் தலைவாஸ் அணி வெற்றி
x
தினத்தந்தி 14 Sep 2017 12:15 AM GMT (Updated: 13 Sep 2017 6:57 PM GMT)

புரோ கபடி லீக்கில் நேற்று நடந்த உத்தரபிரதேச யோத்தா அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்றது.

சோனிபேட்,

12 அணிகள் இடையிலான 5–வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா இருமுறையும், எதிர்பிரிவில் உள்ள அணியுடன் ஒரு முறையும் மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே–ஆப்) முன்னேறும். 

சோனிபேட்டில் நேற்றிரவு அரங்கேறிய 75–வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்–உத்தரபிரதேச யோத்தா அணிகள் (பி பிரிவு) மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய உத்தரபிரதேச யோத்தா அணி 5 நிமிடங்களில் தமிழ் தலைவாஸ் அணியை ஆல்–அவுட் செய்தது. முதல் பாதியில் உத்தரபிரதேச யோத்தா அணி 18–12 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 

சரிவில் இருந்து மீண்டது

பிற்பாதியில் தமிழ் தலைவாஸ் அணி அபாரமாக விளையாடி சரிவில் இருந்து எழுச்சி பெற்று உத்தரபிரதேச அணியை ஆல்–அவுட் செய்தது. இருப்பினும் உத்தரபிரதேச அணியின் கேப்டன் நிதின் தோமர் அடிக்கடி போனஸ் புள்ளியை எடுத்ததால் தமிழ் தலைவாஸ் அணியால் முன்னிலை பெற முடியவில்லை. கடைசி 3 நிமிடம் இருக்கையில் தமிழ் தலைவாஸ் அணி, உத்தரபிரதேச அணியை 2–வது முறையாக ஆல்–அவுட் செய்து ஒரு புள்ளி முன்னிலை பெற்றது. 

ஆனால் அதன் பிறகு நிதின் தோமர் ஒரு ரைடில் 3 புள்ளிகள் எடுக்க தமிழ் தலைவாஸ் அணியின் வெற்றி வாய்ப்பு மதில் மேல் பூனையானது. களத்தில் உச்சக்கட்ட டென்‌ஷன் நிலவியது. இனி தமிழ் தலைவாஸ் நிமிர்வது கடினம் என்று ரசிகர்கள் நினைத்த வேளையில், தமிழ் தலைவாஸ் கேப்டன் அஜர் தாகூர், உத்தரபிரதேச வீரர்களின் பிடியில் இருந்து பீனிக்ஸ் பறவை போல் மீண்டு எல்லை கோட்டை தொட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். அவர் 3 பேரை அவுட் செய்ததால், தமிழ் தலைவாஸ் அணி 30 வினாடிகளில் இருக்கும் போது, 2 புள்ளி முன்னிலை கண்டது. 

தமிழ் தலைவாஸ் ‘திரில்’ வெற்றி

அதன் பிறகு இறுதிகட்ட வினாடிகளில் தமிழ் தலைவாஸ் அணியினர் தற்காப்பு யுக்தியை கடைபிடிக்கும் விதமாக எதிரணி வீரரை முன்னேற விடாமல் ஒரு புள்ளியை மட்டும் விட்டுக்கொடுத்து தங்கள் முன்னிலையை தக்கவைத்து கொண்டனர்.

திரிலிங்கான ஆட்டத்தின் முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 34–33 என்ற புள்ளி கணக்கில் உத்தரபிரதேச யோத்தா அணியை வீழ்த்தியது. தமிழ் தலைவாஸ் அணியில் கேப்டன் அஜய் தாகூர், பிரபஞ்சன் தலா 8 புள்ளிகள் திரட்டினார்கள். உத்தரபிரதேச அணி கேப்டன் நிதின் தோமர் 14 புள்ளிகள் குவித்தார். 10–வது ஆட்டத்தில் ஆடிய தமிழ் தலைவாஸ் அணி பெற்ற 2–வது வெற்றி இதுவாகும். 14–வது ஆட்டத்தில் ஆடிய உத்தரபிரதேச அணி சந்தித்த 6–வது தோல்வி இதுவாகும்.

புனே அபாரம்

மற்றொரு ஆட்டத்தில் புனேரி பால்டன் அணி (ஏ பிரிவு) 38–22 என்ற புள்ளி கணக்கில் உள்ளூர் அணியான அரியானா ஸ்டீலர்சை எளிதில் தோற்கடித்து 7–வது வெற்றியை பதிவு செய்தது. இன்றைய ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ்– ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (இரவு 8 மணி) அணிகள் மோதுகின்றன.

Next Story