ஜப்பான் பார்முலா1 கார்பந்தயத்தில் இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் முதலிடம்


ஜப்பான் பார்முலா1 கார்பந்தயத்தில் இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் முதலிடம்
x
தினத்தந்தி 8 Oct 2017 10:45 PM GMT (Updated: 8 Oct 2017 5:57 PM GMT)

ஜப்பானில் நடந்த பார்முலா1 கார்பந்தயத்தில் இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் முதலிடம் பிடித்தார்.

சுஜுகா,

இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 20 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 16–வது சுற்றான ஜப்பான் கிராண்ட்பிரி அங்குள்ள சுஜுகா ஓடுதளத்தில் நேற்று நடந்தது. பந்தய தூரமான 307.471 கிலோ மீட்டர் இலக்கை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப் பாய்ந்தனர்.

முதல்வரிசையில் இருந்து புறப்பட்ட மூன்று முறை சாம்பியனான இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) எதிர்பார்த்தது போலவே ஆதிக்கம் செலுத்தினார். 1 மணி 27 நிமிடம் 31.194 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடத்தை பிடித்த அவர் 25 புள்ளிகளை தட்டிச்சென்றார். இந்த சீசனில் அவரது 8–வது வெற்றி இதுவாகும். அவரை விட 1.211 வினாடி பின்தங்கிய நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (ரெட்புல் அணி) 2–வதாக வந்து 18 புள்ளிகளை பெற்றார். போர்ஸ் இந்தியா அணிக்காக பங்கேற்கும் ஈஸ்ட்பான் ஒகான் (பிரான்ஸ்), செர்ஜியோ பெரேஸ் (மெக்சிகோ) ஆகியோர் 6, 7–வது இடங்களை பிடித்து முறையே 8, 6 புள்ளிகளை பெற்றனர். ஹாமில்டனின் பிரதான எதிரியான முன்னாள் சாம்பியன் ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல், என்ஜின் கோளாறு காரணமாக தொடக்க ரவுண்டிலேயே விலக நேரிட்டது.

இதுவரை நடந்துள்ள 16 சுற்றுகள் முடிவில் சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான வாய்ப்பில் ஹாமில்டன் 306 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். இன்னும் 4 சுற்று மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் அவர் மகுடம் சூடுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. வெட்டல் 247 புள்ளிகளுடன் 2–வது இடத்தில் உள்ளார். அடுத்த போட்டி வருகிற 22–ந்தேதி அமெரிக்காவில் நடக்கிறது.

Next Story