சிந்து, சாய்னா உள்பட பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகள் இன்று ஏலம்


சிந்து, சாய்னா உள்பட பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகள் இன்று ஏலம்
x
தினத்தந்தி 8 Oct 2017 10:15 PM GMT (Updated: 8 Oct 2017 7:16 PM GMT)

சென்னை ஸ்மா‌ஷர்ஸ், மும்பை ராக்கெட்ஸ், பெங்களூரு பிளாஸ்டர்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.

ஐதராபாத்,

மொத்தம் ரூ.6 கோடி பரிசுத்தொகைக்கான 3–வது பிரிமீயர் பேட்மிண்டன் லீக் (பி.பி.எல்.) போட்டி டிசம்பர் 22–ந்தேதி முதல் ஜனவரி 14–ந்தேதி வரை மும்பை, ஐதராபாத், லக்னோ, சென்னை, கவுகாத்தி ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது.

இந்த போட்டிக்கான வீரர், வீராங்கனைகளின் ஏலம் ஐதராபாத்தில் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது.

82 இந்தியர்கள் உள்பட மொத்தம் 11 நாடுகளை சேர்ந்த 120 பேர் ஏலப்பட்டியலில் இடம் பெற்று இருக்கிறார்கள். உலக சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான விக்டர் ஆக்சல்சென் (டென்மார்க்), 2–ம் நிலை வீரர் சன் வான் ஹோ (தென்கொரியா), இந்திய முன்னணி வீரர் ஸ்ரீகாந்த், ‘நம்பர் ஒன்’ வீராங்கனை தாய் ஜூ யிங் (சீனத்தைபே), ஒலிம்பிக் சாம்பியன் கரோலினா மரின் (ஸ்பெயின்), இந்திய நட்சத்திர மங்கைகள் பி.வி.சிந்து, சாய்னா நேவால் உள்ளிட்டோருக்கு ஏலத்தில் கடும் கிராக்கி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு அணியும் 2.12 கோடி வரை செலவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஒருவரை ரூ.72 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்க முடியும். குறிப்பிட்ட வீரர், வீராங்கனையை ஒன்றுக்கு மேற்பட்ட அணிகள் அதிகபட்ச ஒரே தொகைக்கு கேட்கும் போது, குலுக்கல் முறையில் ஒதுக்கப்படுவார்.


Next Story