துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 15 Oct 2017 10:30 PM GMT (Updated: 15 Oct 2017 8:32 PM GMT)

உலகின் சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவராக இங்கிலாந்தின் பென் ஸ்டோக்சும் திகழ்கிறார்.

காதலியை கரம்பிடித்தார், ஸ்டோக்ஸ்

 சமீபத்தில் இரவு விடுதியில் குடித்து விட்டு வாலிபரை தாக்கியதால் போலீசில் சிக்கினார். அவருக்கும் வலது கையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக விடுவிக்கப்பட்டாலும் இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் அவர் ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். இந்த சர்ச்சைக்கு மத்தியில் 26 வயதான பென்ஸ்டோக்ஸ் நேற்று முன்தினம் தனது வாழ்க்கையில் 2-வது இன்னிங்சை தொடங்கினார்.

ஸ்டோக்ஸ், தனது காதலியான கிளார் ராட்சிலிப்புடன் 2013-ம் ஆண்டு திருமணம் நிச்சயம் செய்திருந்தார். இந்த நிலையில் சோமர்செட்டில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் ஒன்றில் மோதிரம் மாற்றி அவரை திருமணம் செய்து கொண்டார். முறைப்படி இப்போது திருமணம் செய்து கொண்டாலும் இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். அவர்களும் திருமண விழாவிற்கு வந்திருந்தனர். இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட், ஒரு நாள் போட்டி அணியின் கேப்டன் மோர்கன், அலஸ்டயர் குக், ஸ்டூவர்ட் பிராட், ஜோஸ் பட்லர் உள்ளிட்ட வீரர்கள் நேரில் சென்று புதுமண ஜோடியை வாழ்த்தினர்.

‘குல்தீப், சாஹலின் பந்து வீச்சு சவாலாக இருக்கும்’ -வில்லியம்சன்

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் முதலாவது ஆட்டம் மும்பையில் வருகிற 22-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி நியூசிலாந்து கேப்டன் கனே வில்லியம்சன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவும், யுஸ்வேந்திர சாஹலும் திறமையான வீரர்கள். ஐ.பி.எல்.

கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு அதன் மூலம் இந்திய அணிக்குள் நுழைந்துள்ளனர். இருவரும் அண்மைகாலமாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார்கள். அவர்களை சமாளிப்பது மிகவும் கடினமான சவால் என்பதை அறிவோம். ஆனால் அதற்கு தயாராக இருக்கிறோம். இங்குள்ள சூழலுக்கும், வித்தியாசமான ஆடுகளங்களுக்கும் ஏற்ப அணுகுமுறையை மாற்றிக்கொள்வது மிகவும் முக்கியமாகும்’ என்றார்.

நியூசிலாந்து பயிற்சியாளர் மைக் ஹெஸ்சன் கூறும் போது, ‘எங்கள் அணியில் நிறைய வீரர்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்டின் போது குல்தீப் யாதவின் பந்து வீச்சை எதிர்கொண்டு இருக்கிறார்கள். சிலர் அவருடன் ஒரே அணியில் இணைந்து விளையாடி உள்ளனர். இந்த அனுபவம் எங்களுக்கு உதவிகரமாக இருக்கும்’ என்றார்.

ஆஸ்திரேலிய வீரர்கள் சென்ற பஸ்மீது கல்வீச்சு: மேலும் 4 பேர் கைது

கவுகாத்தியில் கடந்த 10-ந்தேதி இரவு நடந்த இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பின்னர் மைதானத்தை விட்டு ஆஸ்திரேலிய வீரர்கள் பஸ்சில் புறப்பட்ட போது அவர்கள் சென்ற பஸ்சின் மீது கற்கள் வீசி தாக்கப்பட்டன. பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், அதில் இருவர் பிளஸ்-2 மாணவர்கள் என்றும் கவுகாத்தி போலீஸ் கமிஷனர் ஹிரென் சந்திரநாத் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார். மேலும் அவர், ‘போதையில் இருந்த இந்த 4 பேரும் மைதானத்தின் அருகில் செல்போனில் கிரிக்கெட் போட்டியை பார்த்துள்ளனர்.

இந்திய அணி தோற்றதும் கோஷம் எழுப்பிய இவர்கள் அந்த வழியாக ஆஸ்திரேலிய வீரர்களின் பஸ் வருவதை கண்டதும் அவர்களில் ஒருவர் கற்களை வீசியிருக்கிறார். அதன் பிறகு அங்கிருந்து ஓடிவிட்டனர்’ என்றார். ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களுக்கு இதில் தொடர்பு இருக்கிறதா என்று விசாரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Next Story