பார்முலா1 கார்பந்தயம்: 19-வது சுற்றில் செபாஸ்டியன் வெட்டல் வெற்றி


பார்முலா1 கார்பந்தயம்: 19-வது சுற்றில் செபாஸ்டியன் வெட்டல் வெற்றி
x
தினத்தந்தி 13 Nov 2017 11:30 PM GMT (Updated: 13 Nov 2017 7:15 PM GMT)

பார்முலா1 கார்பந்தயத்தின் 19-வது சுற்றான பிரேசில் கிராண்ட்பிரி போட்டியில் ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டல் வெற்றி பெற்றார்.

சாபாலோ,

கார் பந்தயங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற பார்முலா1 கார்பந்தயம் இந்த ஆண்டு 20 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 19-வது சுற்றான பிரேசில் கிராண்ட்பிரி பந்தயம் அங்குள்ள சாபாலோ ஓடுதளத்தில் நேற்று முன்தினம் நடந்தது. பந்தய தூரமான 305.909 கிலோமீட்டர் இலக்கை நோக்கி 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் சீறிப்பாய்ந்தனர். இதில் 4 வீரர்களை தவிர மற்ற அனைவரும் பந்தய தூரத்தை நிறைவு செய்தனர்.

இதில் முன்னாள் சாம்பியனான ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டல் (பெராரீ அணி) 1 மணி 31 நிமிடம் 26.262 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து முதலிடத்தை பிடித்தார். அவருக்கு 25 புள்ளிகள் கிடைத்தது. ஜூலை மாதத்துக்கு பிறகு செபாஸ்டியன் வெட்டல் பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் (மெர்சிடஸ் அணி) 2-வது இடமும் (18 புள்ளிகள்), மற்றொரு பின்லாந்து வீரர் கிமி ரெய்க்கோனன் (15 புள்ளிகள்) 3-வது இடமும் பிடித்தனர். கடந்த சுற்றிலேயே (மெக்சிகோ) 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்வதை உறுதி செய்த இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 4-வது இடத்துடன் 12 புள்ளிகள் பெற்றார்.

இதுவரை நடந்துள்ள 19 சுற்று பந்தயங்கள் முடிவில் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் 345 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டல் 302 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் 280 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

இந்த சீசனின் 20-வது மற்றும் கடைசி சுற்று பந்தயம் வருகிற 26-ந் தேதி அபுதாபியில் நடக்கிறது. ஹாமில்டன் பட்டம் வென்று விட்டதால் இது சம்பிரதாயத்துக்கான போட்டியாகவே இருக்கும் எனலாம்.

Next Story