உலக பெண்கள் இளையோர் குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 5 பதக்கம் உறுதி


உலக பெண்கள் இளையோர் குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 5 பதக்கம் உறுதி
x
தினத்தந்தி 22 Nov 2017 9:15 PM GMT (Updated: 22 Nov 2017 7:26 PM GMT)

5–வது உலக பெண்கள் இளையோர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்து வருகிறது.

கவுகாத்தி,

5–வது உலக பெண்கள் இளையோர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்து வருகிறது. இதில் 51 கிலோ எடைப்பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை ஜோதி 5–0 என்ற புள்ளி கணக்கில் மார்சீஸ் கியாவனாவை (இத்தாலி) வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியதுடன் பதக்கத்தையும் உறுதி செய்தார். 64 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை அன்குஷிதா போரோ 3–2 என்ற புள்ளி கணக்கில் நிகோலி ரிபெக்காவை (இத்தாலி) சாய்த்து அரைஇறுதியை எட்டினார். அவருக்கும் குறைந்தது வெண்கலப்பதக்கம் கிடைப்பது உறுதியாகி விட்டது. இதன்மூலம் சில மாதங்களுக்கு முன்பு பல்கேரியாவில் நடந்த போட்டியில் நிகோலியிடம் அடைந்த தோல்விக்கு அன்குஷிதா பழிதீர்த்துக் கொண்டார். உள்ளூர் மங்கையான அன்குஷிதாவின் ஆட்டத்தை காண, உடல்நலம் பாதிக்கப்பட்ட அவரது சகோதரி உள்பட ஒட்டுமொத்த குடும்பத்தினரும் வந்திருந்தனர். களத்தில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட போது அவரது கண்களில் ஆனந்த கண்ணீர் எட்டிப் பார்த்தது. இதே போல் சாக்ஷி (54 கிலோ), ஷாஷி சோப்ரா (57 கிலோ), நீது (45–48 கிலோ) ஆகிய இந்தியர்களும் தங்களது கால்இறுதி ஆட்டங்களில் வெற்றி கண்டு பதக்கத்தை உறுதி செய்தனர்.


Next Story