மாநில கைப்பந்து போட்டி முதல் ஆட்டத்தில் ஐ.ஓ.பி. அணி தோல்வி


மாநில கைப்பந்து போட்டி முதல் ஆட்டத்தில் ஐ.ஓ.பி. அணி தோல்வி
x
தினத்தந்தி 11 Dec 2017 9:30 PM GMT (Updated: 11 Dec 2017 7:48 PM GMT)

மாநில கைப்பந்து போட்டியில் நடப்பு சாம்பியன் ஐ.ஓ.பி. அணி தனது முதல் ஆட்டத்தில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது.

சென்னை,

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் எஸ்.என்.ஜெ.குழுமம் ஆதரவுடன் 67-வது மாநில சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. 17-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் 58 அணிகளும், பெண்கள் பிரிவில் 30 அணிகளும் கலந்து கொண்டுள்ளன.

தொடக்க விழாவில் வருமான வரி இணைகமிஷனர் எஸ்.பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு கைப்பந்து சங்க தலைவர் எஸ்.வாசுதேவன், பொதுச்செயலாளர் ஏ.கே.சித்திரைபாண்டியன், சென்னை மாவட்ட கைப்பந்து சங்க தலைவர் ஆர்.அர்ஜூன் துரை, ரோமா குழும நிர்வாகி ராஜன், போட்டி அமைப்பு குழுவினர் பழனியப்பன், ஜெகதீசன், பாலச்சந்திரன், உபைதுர் ரகுமான், கேசவன் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

ஆண்களுக்கான ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள நடப்பு சாம்பியன் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐ.ஓ.பி) அணி, சென்னை ஸ்பைக்கர்ஸ் அணியை சந்தித்தது. விறுவிறுப்பு இந்த ஆட்டத்தில் ஐ.ஓ.பி. அணி 20-25, 27-25, 20-25 என்ற செட் கணக்கில் சென்னை ஸ்பைக்கர்ஸ் அணியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது.

‘பி’ பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் இந்தியன் வங்கி அணி 25-22, 26-24 என்ற நேர்செட்டில் எஸ்.டி.சி. (பொள்ளாச்சி) அணியை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது. மற்ற ஆட்டங்களில் சென்னை ஸ்போர்ட்ஸ் அகாடமி, விஜய் பிரண்ட்ஸ், சென்னை மாநகர போலீஸ், எஸ்.ஆர்.எம். அகாடமி, தமிழ்நாடு போலீஸ், வி.ஜி.எஸ். (தாம்பரம்), பனிமலர், எஸ்.டி.ஏ.டி., ஜமால் (திருச்சி) அணிகள் வெற்றி கண்டன.

பெண்களுக்கான ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள நடப்பு சாம்பியன் ஜேப்பியார் அணி 25-22, 25-13 என்ற நேர்செட்டில் பி.கே.ஆர். (கோபி) அணியை தோற்கடித்தது. ‘பி’ பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் டாக்டர் சிவந்தி கிளப் அணி 25-23, 25-14 என்ற நேர்செட்டில் எஸ்.டி.சி. (பொள்ளாச்சி) அணியை வீழ்த்தியது.

மற்ற ஆட்டங்களில் சேலம் என்ஜினீயரிங் கல்லூரி, மீனாட்சி (அரியலூர்), என்.ஜி.எம். (பொள்ளாச்சி), ஹோலிகிராஸ் (நாகர்கோவில்) அணிகள் வெற்றி கண்டன.

Next Story