துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 2 Jan 2018 8:30 PM GMT (Updated: 2 Jan 2018 6:59 PM GMT)

11–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வருகிற ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நடக்கிறது. இந்த போட்டிக்கான வீரர்கள் ஏலம் வருகிற 27, 28–ந் தேதிகளில் பெங்களூருவில் நடைபெறுகிறது.

பெங்களூரு அணியின் பயிற்சியாளராக கிர்ஸ்டன், நெஹரா நியமனம்

* 11–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வருகிற ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நடக்கிறது. இந்த போட்டிக்கான வீரர்கள் ஏலம் வருகிற 27, 28–ந் தேதிகளில் பெங்களூருவில் நடைபெறுகிறது. இதில் ஒவ்வொரு அணியும் 5 வீரர்களை தக்க வைத்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதாவது 3 வீரர்களை நேரடியாகவும், 2 வீரர்களை ஏலத்தின் போது ‘மேட்ச் கார்டு’ சலுகையை பயன்படுத்தியும் பெற முடியும். தக்க வைக்க விரும்பும் வீரர்கள் குறித்து ஒவ்வொரு அணி நிர்வாகமும் வருகிற 4–ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த முன்னாள் வீரர் கேரி கிர்ஸ்டனும், பந்து வீச்சு பயிற்சியாளராக சமீபத்தில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இந்திய வேகப்பந்து வீச்சாளர் நெஹராவும் நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றனர். இருவரும் அணியின் ஆலோசகராகவும் செயல்படுவார்கள் என்று பெங்களூரு அணி நிர்வாகம் நேற்று அறிவித்துள்ளது. நியூசிலாந்து முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனியல் வெட்டோரி தொடர்ந்து தலைமை பயிற்சியாளராக நீடிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பயிற்சியாளர்களான ஆஸ்திரேலியாவை சேர்ந்த டிரென்ட் வுட்ஹில், ஆன்ட்ரூ மெக்டொனால்டு ஆகியோர் முறையே பேட்டிங் திறன் மேம்பாடு, பந்து வீச்சு திறன் மேம்பாடு பணிகளை கவனிப்பார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய பயிற்சியாளர்களை டேனியல் வெட்டோரி வரவேற்றுள்ளார்.

கைப்பட சமைத்து நண்பர்களுக்கு விருந்தளித்த தெண்டுல்கர்

* ஆங்கில புத்தாண்டை தனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மும்பையில் நேற்று முன்தினம் இரவு கொண்டாடிய இந்திய கிரிக்கெட் சகாப்தம் சச்சின் தெண்டுல்கர் தனது கைப்பட சமைத்த உணவு பொருட்களை நண்பர்களுக்கு பரிமாறி மகிழ்ந்தார். தான் உணவு தயார் செய்யும் வீடியோவை தெண்டுல்கர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அத்துடன் அவர் அனைத்து தரப்பினருக்கும் இந்த புத்தாண்டு சிறப்பானதாக அமைய வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ்.எல். கால்பந்து: கொல்கத்தா–கோவா அணிகள் இன்று மோதல்

* 4–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கொல்கத்தாவில் இன்று (புதன்கிழமை) இரவு நடைபெறும் 37–வது லீக் ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா–எப்.சி.கோவா அணிகள் மோதுகின்றன. கொல்கத்தா அணி இதுவரை 6 ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி, 2 தோல்வி, 2 டிராவுடன் புள்ளி பட்டியலில் 7–வது இடத்தில் உள்ளது. கோவா அணி 6 ஆட்டத்தில் ஆடி 4 வெற்றி, 2 தோல்வியுடன் 5–வது இடத்தில் இருக்கிறது. இரு அணிகளும் இதுவரை 8 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் கொல்கத்தா அணி 3 முறை வெற்றி கண்டுள்ளது. 5 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. ஒரு ஆட்டத்தில் கூட கோவா அணி, கொல்கத்தாவை வீழ்த்தியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

டேபிள் டென்னிஸ் தரவரிசை: சத்யனுக்கு 49–வது இடம்

* உலக டேபிள் டென்னிஸ் வீரர்–வீராங்கனைகளின் தரவரிசை பட்டியலை சர்வதேச டேபிள் டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் இந்திய வீரர்கள் சத்யன் 49–வது இடத்தையும், சரத்கமல் 51–வது இடத்தையும், சவுமியஜித் கோஷ் 58–வது இடத்தையும், ஹர்மீத் தேசாய் 60–வது இடத்தையும், சானில் ஷெட்டி 68–வது இடத்தையும், அந்தோணி அமல்ராஜ் 87–வது இடத்தையும் பிடித்துள்ளனர். பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் இந்திய வீராங்கனைகள் மனிகா பத்ரா 62–வது இடத்தையும், மவுமா தாஸ் 74–வது இடத்தையும், மதுரிகா பத்கர் 81–வது இடத்தையும் பெற்றுள்ளனர்.


Next Story