துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 3 Jan 2018 8:30 PM GMT (Updated: 3 Jan 2018 7:43 PM GMT)

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் நடந்த ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் விதர்பா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி முதல்முறையாக கோப்பையை கைப்பற்றியது.

* மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் நடந்த ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் விதர்பா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி முதல்முறையாக கோப்பையை கைப்பற்றியது. தோல்வி கண்ட டெல்லி அணியின் கேப்டன் ரிஷாப் பான்ட், உன்முக்சந்த் உள்ளிட்ட அனைத்து வீரர்கள் மற்றும் பயணிகளுடன் இந்தூரில் இருந்து இன்டிகோ விமானம் நேற்று முன்தினம் இரவு 9.20 மணியளவில் புறப்பட தயாரானது. ஓடுபாதையில் விமானம் ஓடுகையில் என்ஜினீல் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் விமானத்தால் மேல் எழும்பி பறக்க முடியவில்லை. இதனை அடுத்து விமானத்தில் இருந்த எல்லா பயணிகளும் இறக்கி விடப்பட்டு காத்திருக்க வைக்கப்பட்டனர். நீண்ட நேரத்துக்கு பிறகு தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் விமானம் புறப்பட்டு டெல்லி சென்றடைந்தது.

*ஆஷஸ் தொடர் முடிந்ததும் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது. முதலாவது ஒரு நாள் போட்டி மெல்போர்னில் வருகிற 14-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான ஆஸ்திரேலிய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. மேக்ஸ்வெல் அதிரடியாக கழற்றி விடப்பட்டார். அவருக்கு பதிலாக கிறிஸ் லின் இடம் பிடித்துள்ளார். மேக்ஸ்வெல் சிறந்த பேட்ஸ்மேனாக இருந்தாலும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாததால் நீக்கப்பட்டு இருப்பதாக ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் தெரிவித்துள்ளார். அவர் தனது பயிற்சியில் அதிக அக்கறை செலுத்த வேண்டும் என்றும் சுமித் குறிப்பிட்டார். விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் 7 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு நாள் போட்டி அணிக்கு அழைக்கப்பட்டு இருக்கிறார்.

* தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஒட்டிஸ் கிப்சன் கேப்டவுனில் நேற்று அளித்த பேட்டியில், ‘இந்திய அணி தற்போது நம்பர் ஒன் இடத்தில் உள்ளது. அந்த அணியில் உலக தரம் வாய்ந்த வீரர்கள் பலர் உள்ளனர். அவர்கள் சொந்த நாட்டில் மட்டும் உலக தரம் வாய்ந்த வீரர்கள் இல்லை. இந்தியா நல்ல அணியாகும். அவர்கள் நிறைய நாடுகளுக்கு சென்று விளையாடி தற்போது சிறந்த நிலையில் உள்ளனர். இந்த போட்டி தொடர் கடுமையானதாக இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம். கடந்த காலங்களை போல் இந்த முறை இந்திய அணியை எளிதில் வீழ்த்த முடியும் என்று நான் நினைக்கவில்லை. டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாகும். அடுத்த இரண்டு போட்டி தொடர்களை நாங்கள் வென்று விட்டால் நம்பர் ஒன் இடத்தை நெருங்கி விடுவோம்’ என்று தெரிவித்தார்.

Next Story