துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 18 Jan 2018 8:30 PM GMT (Updated: 18 Jan 2018 8:21 PM GMT)

செஞ்சூரியனில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

* செஞ்சூரியனில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. பின்னர் பேட்டி அளித்த இந்திய கேப்டன் விராட் கோலி, நிருபர்களின் சரமாரியான கேள்வியால் ஆவேசமடைந்தார். ‘இந்திய அணியில் மாற்றம் செய்தும் பலன் இல்லையே? இது தான் சிறந்த ஆடும் லெவன் அணியா?’ என்று ஒரு நிருபர் கேட்டதும் கொதித்து போன கோலி, ‘நான் உங்களிடம் சண்டை போட வரவில்லை. கேள்விகளுக்கு பதில் அளிக்கவே வந்துள்ளேன். நாங்கள் வெற்றி பெற்று இருந்தால் இது தான் சிறந்த அணி என்று சொல்லி இருப்பீர்களா? சிறந்த 11 வீரர்கள் யார் என்று நீங்கள் (நிருபர்கள்) சொல்லுங்கள். அவர்களை விளையாட வைக்கிறோம். போட்டியின் முடிவுகளை வைத்து மட்டும் களம் காணும் 11 வீரர்களை தேர்வு செய்வதில்லை. தோல்வியால் மிகுந்த வேதனையில் இருக்கிறோம்’ என்றார்.

* செஞ்சூரியன் டெஸ்டில் இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த முரளிவிஜய் பேட்டிங் செய்யும் போது, சக வீரர் லோகேஷ் ராகுலுடன், ‘மச்சான்.... இந்த ஓவரில் எல்லா பந்தையும் உள்ளேயே தான் போடுறாங்க....’ என்று தமிழில் பேசுவது போன்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

* ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. மெல்போர்னில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 305 ரன்கள் இலக்கை ‘சேசிங்’ செய்து சாதனை படைத்தது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி பிரிஸ்பேனில் இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி காலை 8.50 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது. இந்த ஆட்டத்தின் மூலம், இங்கிலாந்து வீரர்களில் அதிக ஒரு நாள் போட்டிகளுக்கு கேப்டனாக பணியாற்றியவர் என்ற சிறப்பை இயான் மோர்கன் (கேப்டன்ஷிப்பில் 70-வது ஆட்டம்) பெற உள்ளார்.

Next Story