பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ்: சானியா மிர்சா ஜோடி ‘சாம்பியன்’ வெற்றி பெற்றாலும் ‘நம்பர் ஒன்’ இடத்தை இழந்தார்


பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ்: சானியா மிர்சா ஜோடி ‘சாம்பியன்’ வெற்றி பெற்றாலும் ‘நம்பர் ஒன்’ இடத்தை இழந்தார்
x
தினத்தந்தி 7 Jan 2017 9:38 PM GMT (Updated: 7 Jan 2017 9:38 PM GMT)

பிரிஸ்பேன் சர்வதேச டென்னிசில் இந்தியாவின் சானியா மிர்சா– அமெரிக்காவின் பெதானி ஜோடி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. அதே சமயம் சானியாவின் இரட்டையர் ‘நம்பர் ஒன்’ இடம் பறிபோனது. சானியா ஜோடி அசத்தல் பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந

பிரிஸ்பேன்,

பிரிஸ்பேன் சர்வதேச டென்னிசில் இந்தியாவின் சானியா மிர்சா– அமெரிக்காவின் பெதானி ஜோடி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. அதே சமயம் சானியாவின் இரட்டையர் ‘நம்பர் ஒன்’ இடம் பறிபோனது.

சானியா ஜோடி அசத்தல்

பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா இரட்டையர் பிரிவில், அமெரிக்காவின் பெதானி மாடக் சான்ட்சுடன் கைகோர்த்து அடியெடுத்து வைத்தார்.

சானியா– பெதானி ஜோடி நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் 6–2, 6–3 என்ற நேர் செட் கணக்கில் ரஷியாவின் மகரோவா–எலினா வெஸ்னினா இணையை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. இந்த ஆட்டம் 1 மணி 15 நிமிடங்கள் நடந்தது. புதிய சீசனை வெற்றியுடன் தொடங்கியுள்ள சானியா மிர்சாவுக்கு, இரட்டையர் பிரிவில் இது 41–வது மகுடமாகும். கடந்த முறை மார்ட்டினா ஹிங்கிசுடன் இணைந்து இங்கு வெற்றி கண்டிருந்த சானியா மிர்சா, இந்த முறை பெதானியுடன் இணைந்து வாகை சூடியிருக்கிறார். வெற்றிக்கனியை பறித்த சானியா– பெதானி ஜோடிக்கு 470 தரவரிசை புள்ளிகளுடன் ரூ.32 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.

நம்பர் ஒன் இடம் பறிபோனது

இரட்டையர் தரவரிசையில் தொடர்ச்சியாக 91 வாரங்கள் முதலிடத்தில் இருந்த சானியா மிர்சா தற்போது ‘நம்பர் ஒன்’ அரியணையை இழந்துள்ளார். அவரிடம் இருந்து ‘நம்பர் ஒன்’ இடத்தை அவரது புதிய கூட்டாளி பெதானி மாடக் சான்ட்ஸ் தட்டிப்பறித்துள்ளார்.

இந்த வகையில் ஏற்கனவே சானியாவை நெருங்கியிருந்த பெதானி மாடக் சான்ட்ஸ் வெற்றியின் மூலம் முதல் முறையாக ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்து விட்டார். இரட்டையர் தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடத்தை பெறும் 34–வது மங்கை பெதானி ஆவார். சான்ட்சுக்கு வாழ்த்து தெரிவித்த சானியா மிர்சா, ‘மிஸ் வேல்டு நம்பர் ஒன்’ மகுடத்தை அவரிடம் வழங்குவது போன்று உணர்வதாக குறிப்பிட்டார். 31 வயதான பெதானி இதுவரை 3 கிராண்ட்ஸ்லாம் உள்பட மொத்தம் 23 இரட்டையர் பட்டங்களை வென்றுள்ளார்.

பெதானியுடன் தற்காலிகமாக கூட்டணி அமைந்திருந்த சானியா மிர்சா, அடுத்த வாரம் நடக்கும் சிட்னி டென்னிஸ் மற்றும் ஆஸ்திரேலிய ஓபனில் செக்குடியரசின் பார்போரா ஸ்டிரிகோவாவுடன் சேர்ந்து விளையாட உள்ளார்.

வாவ்ரிங்கா தோல்வி

இதன் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் செக்குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 6–0, 6–3 என்ற நேர் செட் கணக்கில் பிரான்சின் அலிசி கார்னெட்டை பந்தாடி கோப்பையை வசப்படுத்தினார். அவருக்கு இது 7–வது சர்வதேச பட்டமாகும். இந்த வெற்றியின் மூலம் தரவரிசையில் ஒரு இடம் ஏற்றம் கண்டு 5–வது இடத்தை பிடித்துள்ளார்.

ஆண்கள் ஒற்றையர் அரைஇறுதி ஆட்டங்களில் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் 7–6 (2), 6–2 என்ற நேர் செட் கணக்கில் மிலோஸ் ராவ்னிக்கையும் (கனடா), ஜப்பானின் நிஷிகோரி 7–6 (3), 6–3 என்ற செட் கணக்கில் சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்காவையும் வீழ்த்தினர்.

சென்னை ஓபனில் 4 முறை வாகை சூடியவரான வாவ்ரிங்கா, இந்த முறை சென்னை ஓபனை தவிர்த்து விட்டு, பிரிஸ்பேன் ஓபனில் களம் இறங்கினார். ஆனால் இதில் இறுதிசுற்றுக்கு கூட முன்னேறாமல் வெளியேறி விட்டார்.


Next Story