ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், செரீனா 2–வது சுற்றுக்கு முன்னேற்றம்


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், செரீனா 2–வது சுற்றுக்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 17 Jan 2017 9:11 PM GMT (Updated: 17 Jan 2017 9:11 PM GMT)

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் ஜோகோவிச், செரீனா 2–வது சுற்றுக்கு முன்னேறினர்.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் ஜோகோவிச், செரீனா 2–வது சுற்றுக்கு முன்னேறினர்.

ஜோகோவிச் வெற்றி

ஆண்டின் முதல் ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. 2–வது நாளான நேற்றும் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டங்கள் நடந்தன.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனும், 2–ம் நிலை வீரருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6–1, 7–6 (7–4), 6–2 என்ற நேர் செட் கணக்கில் அபாயகரமான வீரர்களில் ஒருவரான பெர்னாண்டோ வெர்டஸ்கோவை (ஸ்பெயின்) தோற்கடித்தார். இதில் 2–வது செட்டில் கொஞ்சம் தடுமாறிய ஜோகோவிச் எதிராளியின் 5 ‘மேட்ச் பாயிண்ட்’ ஆபத்தில் இருந்து தப்பித்து அந்த செட்டை டைபிரேக்கரில் வசப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டம் 2 மணி 23 நிமிடங்கள் நீடித்தது. 7–வது முறையாக ஆஸ்திரேலிய ஓபனை கைப்பற்றி புதிய வரலாறு படைக்கும் முனைப்பில் உள்ள ஜோகோவிச் அடுத்து டெனிஸ் இஸ்தோமினை (உஸ்பெகிஸ்தான்) சந்திக்கிறார்.

நடால்–ராவ்னிக்

மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயினின் ரபெல் நடால், ஜெர்மனியின் புளோரியன் மேயருடன் மோதினார். கடந்த ஆண்டு முதல் சுற்றோடு நடையை கட்டிய நடால் இந்த முறை சுதாரிப்போடு செயல்பட்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ரபெல் நடால் 6–3, 6–4, 6–4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றியை ருசித்து 2–வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். ‘‘மீண்டும் மிகப்பெரிய ஸ்டேடியத்தில் விளையாடுவது என்பது சிறப்பான ஒன்று. ரசிகர்கள் காட்டும் ஆதரவும், அன்பும், நெகிழ வைக்கிறது. இந்த ஆட்டத்தில் விளையாடிய விதம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்று 30 வயதான நடால் குறிப்பிட்டார்.

3–ம் நிலை வீரர் கனடாவின் மிலோஸ் ராவ்னிக் 6–3, 6–4, 6–2 என்ற நேர் செட் கணக்கில் ‘நீண்ட கூந்தல்’ நாயகன் டஸ்டின் பிரவுனை (ஜெர்மனி) சாய்த்தார். சர்வீசில் மிரட்டிய ராவ்னிக் 18 ‘ஏஸ்’ சர்வீஸ்கள் வீசியது கவனிக்கத்தக்கது.

சென்னை ஓபன் சாம்பியன்

சென்னை ஓபன் சாம்பியனான ஸ்பெயினின் பாவ்டிஸ்டா அகுத்துக்கு முதல் சுற்று எளிதாக அமைந்தது. அவர் 6–3, 6–1, 6–1 என்ற நேர் செட்டில் கைடோ பெல்லாவை (அர்ஜென்டினா) விரட்டினார். அதே சமயம் ஜெர்மனியின் ‘இளம் புயல்’ அலெக்சாண்டர் ஸ்வெரேவ் தன்னை எதிர்த்த ராபின் ஹாசுடன் (நெதர்லாந்து) 5 செட் வரை மல்லுகட்ட வேண்டி இருந்தது. 2 மணி 54 நிமிடங்கள் நீடித்த இந்த மோதலில் ஸ்வெரேவ் 6–2, 3–6, 5–7, 6–3, 6–2 என்ற செட் கணக்கில் வெற்றி கண்டார். 19 வயதான ஸ்வெரேவ் ஆஸ்திரேலிய ஓபனில் பதிவு செய்த முதல் வெற்றி இதுவாகும்.

கிரிகோர் டிமிட்ரோவ் (பல்கேரியா), டேவிட் பெரர் (ஸ்பெயின்), டேவிட் கோபின் (பெல்ஜியம்), டொமினிக் திம் (ஆஸ்திரியா), கேல் மான்பில்ஸ் (பிரான்ஸ்), கைல் எட்மன்ட் (இங்கிலாந்து), ரிச்சர்ட் கேஸ்கியூட் (பிரான்ஸ்), பெனோய்ட் பேர் (பிரான்ஸ்) ஆகியோரும் வெற்றி பெற்றனர்.

செரீனா அபாரம்

பெண்கள் பிரிவில், 23–வது ‘கிராண்ட்ஸ்லாம்’ பட்டத்துக்கு குறி வைத்திருக்கும் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், தனது முதல் சுற்றில் சுவிட்சர்லாந்தின் முன்னணி வீராங்கனையான பெலின்டா பென்சிச்சை எதிர்கொண்டார். சுட்டெரிக்கும் வெயிலில் ஆக்ரோ‌ஷமாக மட்டையை சுழட்டிய செரீனா 6–4, 6–3 என்ற நேர் செட் கணக்கில் பென்சிச்சை நொறுக்கினார். செரீனாவின் ஆட்டத்தை அவரது வருங்கால கணவரான அமெரிக்க தொழிலதிபர் அலெக்சிஸ் ஒஹானியன் நேரில் கண்டுகளித்தார். 35 வயதான செரீனா 2–வது சுற்றில் செக்குடியரசின் லூசி சபரோவாவுடன் மோதுகிறார்.

தற்போது உலக தரவரிசையில் 2–வது இடம் வகிக்கும் செரீனாவுக்கு ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பரிடம் இருந்து முதலிடத்தை தட்டிப்பறிக்க வாய்ப்பு உள்ளது. செரீனா இந்த பட்டத்தை வென்று, ஏஞ்சலிக் கெர்பர் இறுதிப்போட்டிக்கு முன்பே வீழ்ந்தால் செரீனாவிடம் மீண்டும் ‘நம்பர் ஒன்’ அரியணை சென்று விடும்.

ராட்வன்ஸ்கா

டென்மார்க்கின் கரோலினா வோஸ்னியாக்கி 6–1, 6–2 என்ற நேர் செட்டில் அரினா ரோடினோவாவை (ஆஸ்திரேலியா) துவம்சம் செய்தார். இங்கிலாந்தின் ஹீதர் வாட்சன் 6–3, 3–6, 6–0 என்ற செட் கணக்கில் உள்ளூர் நாயகி சமந்தா ஸ்டோசுருக்கு அதிர்ச்சி அளித்தார். 3–ம் நிலை வீராங்கனை அக்னீஸ்கா ராட்வன்ஸ்கா (போலந்து) 6–1, 4–6, 6–1 என்ற செட் கணக்கில் பைரோன்கோவாவை (பல்கேரியா) வீழ்த்தினார்.

கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), ஜோஹன்னா கோன்டா (இங்கிலாந்து), சிபுல்கோவா (சுலோவக்கியா), பார்போரா ஸ்டிரிகோவா (செக்குடியரசு), எலினா வெஸ்னினா (ரஷியா), சாரா எர்ரானி (இத்தாலி), டைமியா பாக்சின்ஸ்கி (சுவிட்சர்லாந்து), மகரோவா (ரஷியா), டாரியா காவ்ரிலோவா (ஆஸ்திரேலியா) உள்ளிட்டோரும் முதல் தடையை வெற்றிகரமாக கடந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

3–வது நாளான இன்று ஒற்றையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டங்கள் நடைபெறுகிறது.

5 மணி 15 நிமிடங்கள் நீடித்த ‘யுத்தம்’

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் நேற்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த ஆட்டம், இவா கார்லோவிச் (குரோஷியா)– ஹோரோசியா ஜிபல்லோஸ் (அர்ஜென்டினா) ஆகிய வீரர்கள் இடையிலான மோதல் தான். இருவரும் நீயா–நானா என்று சளைக்காமல் மல்லுகட்டியதால் இந்த ஆட்டத்தின் முடிவை அறிய 5 மணி 15 நிமிடங்கள் காத்திருக்க வேண்டி இருந்தது. அதுவும் வெற்றியை நிர்ணயிக்கும் கடைசி செட்டில் இருவரும் தங்களது சர்வீசை மட்டுமே புள்ளியாக மாற்றிக்கொண்டே வந்ததால் அனுமார் வால் போல் நீண்டு கொண்டே போனது. ஒரு வழியாக 42–வது கேமில் கார்லோவிச் வெற்றிக்குரிய புள்ளியை எடுத்து பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார். கடைசி செட் மட்டும் 2 மணி 37 நிமிடங்கள் நடந்தது.

ரசிகர்களுக்கு விருந்து படைத்த இந்த ஆட்டத்தில், 20–ம் நிலை வீரரான இவா கார்லோவிச் 6–7 (6–8), 3–6, 7–5, 6–2, 22–20 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2–வது சுற்றுக்கு முன்னேறினார். 6 அடி 11 அங்குலம் உயரம் கொண்ட கார்லோவிச், சர்வீஸ் போடுவதில் வல்லவர். அதை இங்கும் காண முடிந்தது. எதிராளி தொட முடியாத அளவுக்கு 75 ஏஸ் சர்வீஸ்களை போட்டுத் தாக்கினார்.

இந்த யுத்தம் 5 மணி நேரத்திற்கு மேலாக நீடித்தாலும் ஆஸ்திரேலிய ஓபனில் சாதனைக்குரிய ஆட்டமாக அமையவில்லை. 2012–ம் ஆண்டு ஜோகோவிச்–நடால் இடையிலான இறுதி ஆட்டம் 5 மணி 53 நிமிடங்கள் நடந்ததே ஆஸ்திரேலிய ஓபனில் நீண்ட நேரம் அரங்கேறிய ஆட்டமாகும்.


Next Story