நியூசிலாந்துடனான டேவிஸ் கோப்பை டென்னிஸ் யுகி பாம்ப்ரி, ராம்குமார் வெற்றியால் இந்திய அணி முன்னிலை


நியூசிலாந்துடனான டேவிஸ் கோப்பை டென்னிஸ் யுகி பாம்ப்ரி, ராம்குமார் வெற்றியால் இந்திய அணி முன்னிலை
x
தினத்தந்தி 3 Feb 2017 10:00 PM GMT (Updated: 3 Feb 2017 9:28 PM GMT)

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் யுகி பாம்ப்ரி, ராம்குமார் ஆகியோரின் வெற்றியால் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

புனே,

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் யுகி பாம்ப்ரி, ராம்குமார் ஆகியோரின் வெற்றியால் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

டேவிஸ் கோப்பை டென்னிஸ்

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் ஆசிய-ஓசியானியா குரூப்-1 பிரிவில் இந்தியா-நியூசிலாந்து இடையிலான ஆட்டம் மராட்டிய மாநிலம் புனேயில் நேற்று தொடங்கியது.

இதில் முதலாவது ஒற்றையர் ஆட்டத்தில் உலக தர வரிசையில் 368-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி, 414-வது இடத்தில் உள்ள நியூசிலாந்து வீரர் பின் டியர்னியை சந்தித்தார்.

யுகி பாம்ப்ரி வெற்றி

முதல் செட்டில் ஒரு கட்டத்தில் 1-3 என்ற புள்ளி கணக்கில் பின்தங்கி இருந்த யுகி பாம்ப்ரி பின்னர் சுதாரித்து ஆடி அந்த செட்டை தனதாக்கினார். அதேபோல் 2-வது செட்டில் முதலில் 0-2 என்ற புள்ளி கணக்கில் பின்னடைவை சந்தித்தாலும், யுகி பாம்ப்ரி அதில் இருந்து துரிதமாக மீண்டு அந்த செட்டையும் சொந்தமாக்கினார்.

2 மணி 10 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் யுகி பாம்ப்ரி 6-4, 6-4, 6-3 என்ற நேர்செட்டில் பின் டியர்னியை சாய்த்து இந்திய அணியை 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற வைத்தார்.

ராம்குமார் வெற்றி

2-வது ஒற்றையர் ஆட்டத்தில் உலக தர வரிசையில் 267-வது இடத்தில் இருக்கும் தமிழக வீரர் ராம்குமார், உலக தர வரிசையில் 417-வது இடத்தில் உள்ள நியூசிலாந்து வீரர் ஜோஸ் ஸ்டாதமை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் அபாரமாக செர்வ் செய்த ராம்குமார் 6-3, 6-4, 6-3 என்ற நேர்செட்டில் ஜோஸ் ஸ்டாதமை வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

சாதனை படைப்பாரா லியாண்டர்

இன்று (சனிக்கிழமை) நடைபெறும் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் லியாண்டர் பெயஸ்-விஷ்ணு வர்தன் ஜோடி நியூசிலாந்தின் ஆர்டெம் சிடாக்-மைக்கேல் வீனஸ் இணையுடன் மோதுகிறது. இந்த போட்டியில் லியாண்டர் பெயஸ் ஜோடி வெற்றி பெற்றால், டேவிஸ் கோப்பை போட்டி வரலாற்றில் இரட்டையர் பிரிவில் அதிக வெற்றிகள் (43 வெற்றிகள்) குவித்த வீரர் என்ற உலக சாதனையை லியாண்டர் பெயஸ் படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story