நியூசிலாந்துக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இரட்டையரில் பெயஸ் ஜோடி தோல்வி சாதனையும் நழுவியது


நியூசிலாந்துக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இரட்டையரில் பெயஸ் ஜோடி தோல்வி சாதனையும் நழுவியது
x
தினத்தந்தி 4 Feb 2017 9:03 PM GMT (Updated: 4 Feb 2017 9:03 PM GMT)

நியூசிலாந்துக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பெயஸ், இரட்டையர் பிரிவில் தோற்று சாதனையை தவற விட்டார். பெயஸ் தோல்வி டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் ஆசிய–ஓசியானியா குரூப்–1 பிரிவில் இந்தியா–நியூசிலாந்து இடையிலான ஆட்டம்

புனே,

நியூசிலாந்துக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பெயஸ், இரட்டையர் பிரிவில் தோற்று சாதனையை தவற விட்டார்.

பெயஸ் தோல்வி

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் ஆசிய–ஓசியானியா குரூப்–1 பிரிவில் இந்தியா–நியூசிலாந்து இடையிலான ஆட்டம் மராட்டிய மாநிலம் புனேயில் நடந்து வருகிறது. முதல் நாளில் நடந்த ஒற்றையர் ஆட்டங்களில் இந்திய வீரர்கள் யுகி பாம்ப்ரி, ராம்குமார் ஆகியோர் வெற்றி பெற்றனர். இதனால் இந்தியா 2–0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இந்த நிலையில் 2–வது நாளான நேற்று இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பெயஸ்– விஷ்ணு வர்தன் ஜோடி, ஆர்டெம் சிடாக்–மைக்கேல் வீனஸ் இணையுடன் மோதியது. முதல் செட்டை வெறும் 28 நிமிடங்களில் கைப்பற்றி குழுமியிருந்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளூர் ரசிகர்களை குஷிப்படுத்திய பெயஸ்–விஷ்ணு ஜோடி, அதன் பிறகு பின்னடைவை சந்தித்தது. சரிவில் இருந்து எழுச்சி பெற்ற எதிர் ஜோடி, அடுத்த 3 செட்டுகளை வரிசையாக தனதாக்கி, இந்திய ஜோடிக்கு அதிர்ச்சி அளித்தது.

2½ மணி நேரம் நீடித்த ஆட்டத்தின் முடிவில் ஆர்டெம்–மைக்கேல் வீனஸ் கூட்டணி 3–6, 6–3, 7–6 (8–6), 6–3 என்ற செட் கணக்கில் பெயஸ் ஜோடியை தோற்கடித்தது.

சாதனை நழுவியது

43 வயதான லியாண்டர் பெயஸ், டேவிஸ் கோப்பை டென்னிசில் பங்கேற்ற 55–வது போட்டித் தொடர் இதுவாகும். இந்த ஆட்டத்தில் அவர் வெற்றி பெற்றிருந்தால் 117 ஆண்டுகால டேவிஸ் கோப்பை வரலாற்றில் இரட்டையர் பிரிவில் அதிக வெற்றிகளை குவித்த வீரர் என்ற வரலாற்று சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியிருப்பார். அந்த அரிய சாதனை நழுவிப் போய் விட்டது. தற்போது அவரும், இத்தாலியின் நிகோலா பியட்ராங்ஜெலியும் இரட்டையரில் தலா 42 வெற்றிகளுடன் சமநிலையில் இருக்கிறார்கள். லியாண்டர் பெயஸ் விளையாடும் கடைசி டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி இதுவாக இருக்கக்கூடும் என்று ஏற்கனவே செய்திகள் கசிந்தது குறிப்பிடத்தக்கது.

கடைசி நாளான இன்று மாற்று ஆட்டங்கள் நடைபெறுகிறது. இதில் இந்தியாவின் ராம்குமார், நியூசிலாந்தின் பின் டியர்னியையும், மற்றொரு இந்திய வீரர் யுகி பாம்ப்ரி ஜோஸ் ஸ்டாதமையும் எதிர்கொள்கிறார்கள். இரண்டு ஆட்டங்களில் இந்திய அணி குறைந்தது ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே போட்டியை வசப்படுத்த முடியும்.


Next Story