இங்கிலாந்து அணி கால்இறுதிக்கு தகுதி நடுவர் மீது பந்தை அடித்ததால் கனடா தகுதி இழந்தது


இங்கிலாந்து அணி கால்இறுதிக்கு தகுதி நடுவர் மீது பந்தை அடித்ததால் கனடா தகுதி இழந்தது
x
தினத்தந்தி 6 Feb 2017 11:30 PM GMT (Updated: 6 Feb 2017 7:34 PM GMT)

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் உலக சுற்று முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 3-2 என்ற கணக்கில் கனடாவை வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றது.

ஒட்டாவா,

டேவிஸ் கோப்பை டென்னிஸ்

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் கனடா தலைநகர் ஒட்டாவாவில் நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்து-கனடா அணிகள் மோதின.
இதில் வெற்றி யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் கடைசி மாற்று ஒற்றையர் ஆட்டத்தில் உலக தர வரிசையில் 53-வது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து வீரர் கெய்ல் எட்முன்ட், உலக தர வரிசையில் 251-வது இடத்தில் உள்ள 17 வயதான கனடா வீரர் டெனிஸ் ஷபோவாலோவை எதிர்கொண்டார்.

இங்கிலாந்து அணி வெற்றி

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் கெய்ல் எட்முன்ட் 6-3, 6-4, 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது செர்வ்வை கோட்டை விட்ட ஆத்திரத்தில் கனடா வீரர் டெனிஸ் பந்தை மைதானத்தில் இருந்து வெளியில் அடித்தார். அந்த பந்து நேரடியாக மைதான சேர் நடுவர் அர்னாட் காபாஸ்சின் (பிரான்ஸ்) இடது கண்ணில் தாக்கியது. இளம் வீரரின் இந்த செயலால் ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். நடுவருக்கு ஏற்பட்ட காயத்துக்கு ஐஸ் ஒத்தடம் அளிக்கப்பட்டது. அத்துடன் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் பிரச்சினை எதுவுமில்லை என்பது தெரியவந்தது.

வீரரின் தவறான நடத்தை காரணமாக கனடா அணி தகுதி இழந்ததாக போட்டி அமைப்பு குழுவினர் அறிவித்தனர். இதனால் இங்கிலாந்து அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறியது. உலகின் நம்பர் ஒன் வீரரான ஆன்டி முர்ரே விளையாடாமல் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. கால்இறுதியில் இங்கிலாந்து அணி, பிரான்சை சந்திக்கிறது. இந்த ஆட்டம் பிரான்சில் ஏப்ரல் 7-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை நடக்கிறது.

இனிமேல் தவறு செய்யமாட்டேன்


போட்டிக்கு பிறகு இங்கிலாந்து அணி கேப்டன் லியோன் சுமித் கருத்து தெரிவிக்கையில், ‘கடைசியில் நடந்த சம்பவம் ஆச்சரியமாகவும், அவமானமாகவும் இருந்தது. டெனிஸ் திறமையான இளம் வீரர். இந்த விவகாரத்தில் இருந்து அவர் கடினமான பாடம் கற்று இருப்பார் என்று நினைக்கிறேன். எங்கள் அணி வீரர் கெய்ல் எட்முன்ட் ஆட்டம் அபாரமாக இருந்தது’ என்றார்.

சர்ச்சையில் சிக்கிய கனடா வீரர் டெனிஸ் ஷபோவாலோவ் அளித்த பேட்டியில், ‘தவறுதலாக நடுவர் மீது பந்தை அடித்ததற்காக வெட்கப்படுகிறேன். அதிர்ஷ்டவசமாக அவருக்கு எதுவும் ஆகவில்லை. வெளிப்படையாக சொல்லப்போனால் என்னுடைய இந்த நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது. எனது செயலால் அணிக்கும், நாட்டுக்கும் ஏற்பட்ட அவமரியாதையை நினைத்து வருந்துகிறேன். இதுபோன்ற செயலில் இனிமேல் ஒருபோதும் நான் ஈடுபடமாட்டேன் என்று உறுதி அளிக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Next Story