இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: வீனஸ், வோஸ்னியாக்கி அதிர்ச்சி தோல்வி


இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: வீனஸ், வோஸ்னியாக்கி அதிர்ச்சி தோல்வி
x
தினத்தந்தி 17 March 2017 9:01 PM GMT (Updated: 17 March 2017 9:01 PM GMT)

இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிசில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனைகள் வீனஸ் வில்லியம்ஸ், வோஸ்னியாக்கி அதிர்ச்சி தோல்வி அடைந்தனர்.

இண்டியன்வெல்ஸ்,

இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிசில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனைகள் வீனஸ் வில்லியம்ஸ், வோஸ்னியாக்கி அதிர்ச்சி தோல்வி அடைந்தனர்.

வோஸ்னியாக்கி, வீனஸ் வெளியேற்றம்

பி.என்.பி. பரிபாஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் கால்இறுதி ஆட்டங்கள் நேற்று நடந்தன.

ஒரு ஆட்டத்தில் 26–ம் நிலை வீராங்கனை கிறிஸ்டினா மிலாடெனோவிச் (பிரான்ஸ்) 3–6, 7–6 (4), 6–2 என்ற செட் கணக்கில் முன்னாள் சு£ம்பியன் கரோலினா வோஸ்னியாக்கியை (டென்மார்க்) வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 2 மணி 23 நிமிடங்கள் நீடித்தது. வெற்றியின் மூலம் மிலாடெனோவிச் திங்கட்கிழமை வெளியாகும் புதிய தரவரிசையில் முதல்முறையாக முதல் 20 இடத்திற்குள் நுழைகிறார்.

மற்றொரு ஆட்டத்தில் ரஷியாவின் எலினா வெஸ்னினா 6–2, 4–6, 6–3 என்ற செட் கணக்கில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்சுக்கு அதிர்ச்சி அளித்தார். இண்டியன்வெல்ஸ் டென்னிசில் முதல் முறையாக அரைஇறுதியை எட்டியுள்ள வெஸ்னினா கூறுகையில், ‘ வீனஸ் வில்லியம்சுக்கு எதிராக ஆடுவது எளிதான வி‌ஷயமல்ல. அவர் ஒரு சிறந்த சாம்பியன். கடைசி புள்ளி வரை போராடக்கூடியவர். அப்படிப்பட்ட வீராங்கனையை வீழ்த்தியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.

வாவ்ரிங்கா போராட்டம்

ஆண்கள் ஒற்றையர் கால்இறுதியில் சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரிங்கா 6–4, 4–6 7–6 (2) என்ற செட் கணக்கில் 2 மணி 31 நிமிடங்கள் போராடி ஆஸ்திரியாவின் டொமினிக் திம்மை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார். இது வாவ்ரிங்காவின் 450–வது வெற்றியாகும்.

இதே போல் பாப்லோ காரெனோ பஸ்தா (ஸ்பெயின்) 6–1, 3–6, 7–6 (4) என்ற செட் கணக்கில் பாப்லோ கியூவாசை (உருகுவே) வீழ்த்தி அரைஇறுதிக்கு தகுதி பெற்றார். 3–வது செட்டின் போது எதிராளியின் இரண்டு ‘மேட்ச் பாயிண்ட்’ ஆபத்தில் இருந்து தப்பித்த பாப்லோ காரெனோ பஸ்தா, ஆயிரம் தரவரிசை புள்ளிகளை வழங்கும் இத்தகைய மாஸ்டர்ஸ் போட்டியில் அரைஇறுதிக்கு வந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.


Next Story