இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு பெடரர், வாவ்ரிங்கா முன்னேற்றம்


இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு பெடரர், வாவ்ரிங்கா முன்னேற்றம்
x
தினத்தந்தி 19 March 2017 8:30 PM GMT (Updated: 19 March 2017 8:20 PM GMT)

இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், வாவ்ரிங்கா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

இண்டியன்வெல்ஸ்,

இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், வாவ்ரிங்கா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

பெடரர் அசத்தல்

பி.என்.பி. பரிபாஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த ஒரு அரைஇறுதியில் 4 முறை சாம்பியனும், 10–ம் நிலை வீரருமான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 6–1, 7–6 (4) என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்காவின் ஜாக் சோக்கை வீழ்த்தினார். இந்த தொடரில் செட் அல்லது சர்வீஸ் ஒன்றை கூட இழக்காமல் 35 வயதான பெடரர் கம்பீரமாக இறுதிசுற்றுக்குள் நுழைந்திருக்கிறார்.

மற்றொரு ஆட்டத்தில் 3–ம் நிலை வீரர் சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா 6–3, 6–2 என்ற நேர் செட்டில் பாப்லோ காரெனோ பஸ்தாவை (ஸ்பெயின்) பந்தாடி, முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் 31 வயதான வாவ்ரிங்கா, சக நாட்டவர் ரோஜர் பெடரருடன் பலப்பரீட்சை நடத்துகிறார். இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் ஆண்கள் பிரிவில் ஒரே நாட்டை சேர்ந்த இருவர் இறுதி ஆட்டத்தில் மோத இருப்பது 2001–ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். இவர்களில் யார் வாகை சூடினாலும், 42 ஆண்டு கால இந்த போட்டி வரலாற்றில் அதிக வயதில் சாம்பியன் கோப்பையை வென்ற வீரர் என்ற சிறப்பை பெறுவர்.

இருவரும் இதுவரை 22 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்து இருக்கிறார்கள். அதில் 19–ல் பெடரரும், 3–ல் வாவ்ரிங்காவும் வெற்றி கண்டுள்ளனர்.

ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன்

இரட்டையர் இறுதி ஆட்டத்தில் ரவென் கிளாசென் (தென்ஆப்பிரிக்கா), ராஜீவ் ராம் (அமெரிக்கா) ஜோடி 6–7 (1), 6–4, 10–8 என்ற செட் கணக்கில் லுகாஸ் குபோட் (போலந்து), மார்செலோ மெலோ (பிரேசில்) இணையை வீழ்த்தி கோப்பையை தட்டிச்சென்றது. ராஜீவ் ராமுக்கு நேற்று முன்தினம் 33–வது வயது பிறந்தது. பிறந்த நாள் பரிசாக இந்த வெற்றி அவருக்கு கிடைத்துள்ளது. கிளாசென்–ராஜீவ் ராம் கூட்டாக கைப்பற்றிய 5–வது பட்டம் இதுவாகும்.

பெண்கள் இரட்டையர் இறுதி ஆட்டத்தில் மார்ட்டினா ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து), சான் யங்–ஜான் கூட்டணி 7–6 (2), 6–2 என்ற நேர் செட்டில் லூசி ஹடெக்கா– கேதரினா சினியகோவா (செக்குடியரசு) இணையை சாய்த்து பட்டத்தை வசப்படுத்தியது. ஹிங்கிஸ்– சான் யங் கைகோர்த்த பிறகு சுவைத்த முதல் பட்டம் இதுவாகும்.


Next Story