இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: பெடரர், வெஸ்னினா ‘சாம்பியன்’


இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: பெடரர், வெஸ்னினா ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 20 March 2017 11:30 PM GMT (Updated: 20 March 2017 7:10 PM GMT)

இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரரும்,

இண்டியன்வெல்ஸ்,

பெண்கள் ஒற்றையர் பிரிவில் ரஷிய வீராங்கனை எலினா வெஸ்னினாவும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்கள்.

பெடரர் சாம்பியன்

பி.என்.பி. பரிபாஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் நடந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டியில் 4 முறை சாம்பியனும், 10–ம் நிலை வீரருமான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், சக நாட்டை சேர்ந்த 3–ம் நிலை வீரரான வாவ்ரிங்காவை சந்தித்தார்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ரோஜர் பெடரர் 6–4, 7–5 என்ற நேர்செட்டில் வாவ்ரிங்காவை சாய்த்து சாம்பியன் பட்டத்தை மீண்டும் சொந்தமாக்கினார். 35 வயதான பெடரர் இந்த போட்டியில் சாம்பியன் பட்டத்தை வெல்வது 5–வது முறையாகும். இதன் மூலம் இந்த பட்டத்தை அதிக முறை வென்ற நோவக் ஜோகோவிச்சின் (செர்பியா) சாதனையை பெடரர் சமன் செய்தார். பெடரர் ஏற்கனவே 2004, 2005, 2006, 2012–ம் ஆண்டுகளில் இந்த போட்டியில் பட்டம் வென்று இருந்தார். மேலும் எலைட் மாஸ்டர்ஸ் போட்டியில் அதிக வயதில் பட்டம் வென்ற வீரர் என்ற பெருமையையும் பெடரர் பெற்றார். ஏற்கனவே 2004–ம் ஆண்டில் ஆந்த்ரே அகாசி 34 வயதில் சின்சினாட்டி பட்டத்தை வென்று இருந்ததே சாதனையாக இருந்தது.

தர வரிசையில் முன்னேற்றம்

சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் ரோஜர் பெடரர், உலக ஆண்கள் ஒற்றையர் தர வரிசையில் 4 இடங்கள் முன்னேறி 6–வது இடத்தை பிடித்துள்ளார். தோல்வி கண்ட வாவ்ரிங்கா 3–வது இடத்தில் தொடருகிறார். இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே முதலிடத்திலும், செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் 2–வது இடத்திலும் நீடிக்கின்றனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டியில் உலக தர வரிசையில் 15–வது இடத்தில் இருக்கும் எலினா வெஸ்னினா (ரஷியா) 6–7 (6–8), 7–5, 6–4 என்ற செட் கணக்கில் 8–ம் நிலை வீராங்கனை ஸ்வெட்லனா குஸ்னெட்சோவாவை (ரஷியா) சாய்த்து சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார். இந்த வெற்றியின் மூலம் குஸ்னெட்சோவா தர வரிசையில் 2 இடம் ஏற்றம் கண்டு 13–வது இடத்தை பிடித்துள்ளார். பெண்கள் ஒற்றையர் தர வரிசையில் ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) முறையே முதல் 2 இடங்களை பிடித்துள்ளனர்.


Next Story