மியாமி டென்னிஸ்: 2–வது சுற்றில் ரபெல் நடால், கெர்பர் வெற்றி


மியாமி டென்னிஸ்: 2–வது சுற்றில் ரபெல் நடால், கெர்பர் வெற்றி
x
தினத்தந்தி 25 March 2017 11:00 PM GMT (Updated: 25 March 2017 7:12 PM GMT)

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் 2–வது சுற்று ஆட்டங்களில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

மியாமி,

ரபெல் நடால் வெற்றி

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தர வரிசையில் 7–வது இடத்தில் இருக்கும் ரபெல் நடால் (ஸ்பெயின்) 6–3, 6–4 என்ற நேர்செட்டில் 83–வது இடத்தில் இருக்கும் துடி செலாவை (இஸ்ரேல்) தோற்கடித்து 3–வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் உலக தர வரிசையில் 4–வது இடத்தில் உள்ள நிஷிகோரி (ஜப்பான்) 6–4, 6–3 என்ற நேர்செட்டில் 74–வது இடத்தில் இருக்கும் கெவின் ஆண்டர்சனை (தென்ஆப்பிரிக்கா) சாய்த்து 3–வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். இன்னொரு ஆட்டத்தில் உலக தர வரிசையில் 5–வது இடத்தில் இருக்கும் மிலோஸ் ராவ்னிக் (கனடா) 6–3, 7–5 என்ற நேர்செட்டில் 38–வது இடத்தில் உள்ள விக்டர் டிரோக்கியை (செர்பியா) வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.

3–வது சுற்றில் கெர்பர்

மற்ற ஆட்டங்களில் ஜெரிமி சார்டி (பிரான்ஸ்), டொனால்டு யங் (அமெரிக்கா), ஜாக் சோக் (அமெரிக்கா), பெட்ரிகோ டெல்போனிஸ் (அர்ஜென்டினா), ஜிரி வெஸ்லி (செக் குடியரசு), ஜன் லென்னார்ட் (ஜெர்மனி), பெனோய்ட் பேர் (பிரான்ஸ்), நிகோலஸ் மகுட் (பிரான்ஸ்), பெர்னாண்டோ வெர்டாஸ்கோ (ஸ்பெயின்), பாபியோ போக்னினி (இத்தாலி) ஆகியோர் வெற்றி பெற்று 3–வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) 7–6 (7–3), 6–2 என்ற நேர்செட்டில் சீன வீராங்கனை யிங் யிங் டுவானை தோற்கடித்து 3–வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்ற ஆட்டங்களில் ஜோஹன்னா கோன்டா (இங்கிலாந்து), சமந்தா ஸ்டோசுர் (ஆஸ்திரேலியா), முகுருஜா (ஸ்பெயின்), மேடிசன் கீஸ் (அமெரிக்கா), பார்பரோ ஸ்டிரிகோவா (செக் குடியரசு), ஷூய் பெங் (சீனா), சிமோனா ஹாலெப் (ருமேனியா), ஸ்வெட்லனா குஸ்னெட்சோவா (ரஷியா), வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) ஆகியோர் வெற்றி கண்டனர்.

ரோகன் போபண்ணா ஜோடி தோல்வி

ஆண்கள் இரட்டையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ரோகன் போபண்ணா (இந்தியா)–பாப்லோ கியூவாஸ் (உருகுவே) ஜோடி 5–7, 6–3, 7–10 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் நிக் கைர்ஜியோஸ்–மேட் ரீட் இணையிடம் தோல்வி கண்டு வெளியேறியது.


Next Story